Thursday, January 12, 2012

விதைகளின் வரலாறு - 3

தீபாவளியன்று விடைபெறுவதற்கு முன்பே ஜூட் அண்ணன் ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் அவரவர்க்கான பயணச்சீட்டை கொடுத்து முடித்திருப்பார்.அப்போது மெதுவாய் யாராவது ஆரம்பிப்பார்கள் "ஏய் என்னப்பா ஜூட், எங்களுக்கு மட்டும் சீட் இவ்வளவு தள்ளி போட்ருக்கீங்க, உங்க எல்லாருக்கும் 30 ல வருது எங்களுக்கு மட்டும் 50 கிட்ட போட்ருக்கீங்க", நானும் ஜூட் அண்ணாவும் ஏதோ புரிந்தது போல ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம், அதற்குள் "எங்களுக்கும் தள்ளிதான் இருக்கு போலயே, என்ன வேலை செய்தான் இந்த ரயில்வே டிபார்ட்மெண்ட், எல்லாத்துக்கும் ஒண்ணா போட்டா என்னம்மா?" இது வெள்ளையம்மா சித்தி. "ஒரு லோயர் பெர்த் கூட இல்ல இது பத்தி நாம‌ ரயில்வே மினிஸ்டருக்குக் கண்டிப்பா கம்ப்ளெய்ண்ட் லெட்டர் அனுப்பனும்" இது அனுகுட்டி (எ) அனுராதா அக்கா. "எங்க போட்டா என்ன, எலலாரும் 6 சீட்ல தான் உட்காரப் போறோம், கடைசியா தூங்கும் போது தானா பெர்த்துக்கு போகணும்" என்று ஜூட் அண்ணாவும் நானும் சமாளித்துக் கொண்டிருப்போம்.

ஆனால் எனக்கும் ஜூட் அண்ணாவுக்கும் மட்டுமே தெரியும் அந்தப் பயணச்சீட்டுகளை வாங்குவதற்கு நாங்கள் பட்ட பாடு எங்கள் புன்னகையின் இழைகளெல்லாம் நிரம்பியிருக்கும் அந்த அனுபங்களால். ஒரு நபருக்கு ஒரு முன்பதிவுப் படிவம்தான், அதில் அதிகபட்சம்  6 பெயர் எழுதலாம். பொதுவாகவே 8 மணிக்குத் துவங்கி அடுத்த 10-20 நொடிகளில் மொத்த ரயிலும் முன்பதிவாகி காத்திருப்போர் பட்டியல் வந்து விடும். இதற்காக காலை 5 மணியிலிருந்தே வரிசை துவங்கி விடும். 8 மணிக்கு முன்பதிவு துவங்குவதற்கு முன் வரிசையில் 100க்கும் அதிகாமானோர் நின்று கொண்டிருப்பார்கள். இத்தனையும் கடந்து அந்த 25 பேருக்கும் முன்பதிவு செய்வதற்கும் ஒரு வழி வைத்திருப்பார் அண்ணன்.

ஜூட் அண்ணனோடு பணி புரியும் லோகு என்பவர் ரயில் நிலையம் அருகிலேயே குடியிருந்தார். அவர் காலை 6 மணிக்கே சென்று வரிசையில் நின்றுகொள்வார், அங்கிருந்து கூட்டம் எப்படியிருக்கிறதென்று தகவல் வந்துகொண்டே இருக்கும். பின்பு நானும் ஜூட் அண்ணாவும் அவரோடு வரிசையில் இணைந்து கொள்வோம். வரிசை மெதுவாய் நகர நகர எங்கள் மூவரின் கண்களும் கவுண்டர் மேல் உள்ள போர்டில் தான் இருக்கும். எங்கள் ரயிலில் யாரவது முன்பதிவு செய்தால் அதற்கான மீதியிருக்கும் பயணச்சீட்டுகளின் விவரம் அதில் பளிச்சிடும்,

நாங்கள் சென்றடையும் வரை ஏதாவது 50-60 ஆவ‌து மிஞ்சிவிட்டால் நல்லதென்று எங்களுக்குள் பேசியபடியே நகர்ந்து கொண்டிருப்போம் .எங்கள் வாய்ப்பு வந்ததும் மூவரும் அடுத்தடுத்த கவுண்டரைப் பிடித்துக் கொள்வோம். முதல் சீட்டை ஜூட் அண்ணன் முன்பதிவு செய்யும் போதே எங்கள் நிலையை விளக்கிவிடுவார். அந்த பயணச்சீட்டின் கோச் எண் தெரிந்ததும் நான் அதே கோச்சில் போடுமாறு வேண்டுகோள் வைப்பேன், அதே போல லோகுவும் அவருடைய கவுண்டரில் சொல்வார். சில சமயம் கவுண்டரில் உள்ளவர்கள் எங்களைப் புரிந்து கொள்வார்கள் பல சமயம் வாக்குவாதம் தான். ஒருவழியாக எல்லாம் முடிந்து லோகு கிளம்பிவிடுவார், நானும் அண்ணனும் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு முன்னால் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்ததும் பயணச்சீட்டுகளை சரிபார்க்கத்துவங்குவோம். "எல்லாம் இப்டி பிச்சிபிச்சி போட்றுக்கானுகளே, இதுக்கு பதில் சொல்லி  முடியாதே" என்பார் அண்ணன், அப்போதிருந்தே தயாராகத் துவங்கிடுவோம் நானும் அண்ணனும் நாங்கள் சந்திக்க‌ வேண்டிய கேள்விகளுக்காக.

ஒவ்வொரு முறையும் பயணச்சீட்டோடு சேர்த்து புன்னகையும் ஏதாவது ஒரு அனுபத்தையும் சுமந்தபடியே வெளியேறுவோம். அப்படி ஒரு மாறுபட்ட அனுபவம் 2010ல் எங்களுக்குக் கிடைத்தது

2010ம் ஆண்டு பொங்கலுக்கு ஊருக்குச் செல்வதற்கு இதேபோல் முன்பதிவை முடித்துவிட்டோம், திரும்பி சென்னை வருவதற்கான முன்பதிவு தினம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்று சர்ச்சுக்குப் போய்விட்டு திரும்புகையில் லதா அக்காவையும், மிஷலையும் அழைத்து வருவதாக சொல்லியிருந்தார் அண்ணன், அதனால் அன்று லோகு வரவில்லை நான் சென்று வரிசையில் காத்துக்கொண்டிருந்தேன். அன்று கூட்டம் வழக்கத்தை விட ஏராளமாய் இருந்தது. சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரோடும் வந்து அண்ணனும் என்னோடு சேர்ந்து கொண்டார்.

"ஏன் டாடி எப்பவுமே இப்படிதான் இருக்குமா?" என்று அக்கா கேட்க, "இல்ல மம்மி இன்னிக்கு தீபாவளி தட்கலும் ஓபன் ஆகுது அதான் இப்டி" என்றார் ஜூட் அண்ணன். கணவன் மனைவியென்றாலும் ஜூட் அண்ணனும், லதா அக்காவும் ஒருவைரையொருவர் டாடி, மம்மியென்றே அழைத்துக்கொள்வார்கள் அவர்களது மகள்தான் மிஷல். 8 மணி ஆனதும் நீண்ட வரிசை மெதுமெதுவாய் சுருங்கத் துவங்கியது. சுமாராய் 8:30 இருக்கும் நாங்கள் கவுண்டரை நெருங்கும் போது.

அண்ணன் மிஷலுக்கும், லதா அக்கவுக்கும் என்ன செய்ய வேண்டுமென்று 100 வது முறையாக விளக்கிகொண்டிருந்தார், லதா அக்காவும் சளைக்காமல் "இந்த கோச்ல போடுங்கனு சொன்னா போதும்ல டாடி" என்று 100வது முறையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் முறையும் வந்தது, வழக்கம்போல ஜூட் அண்ணன் கோச் எண்ணைக் கேட்டுச் சொன்னதும் நான், லதா அக்கா, மிஷல் மூவரும் அவரவர் கவுண்டரில் அதே கோச்சில் போடும்படி சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

திடீரென்று ஒரு குரல் "மேடம் நீங்க பண்றது ஃபோர்ஜரி" என்று எனக்கு அருகாமையில் கேட்டது. அந்தக் குரலை எதிர்கொண்டபடி கவுண்டருக்கு வெளியே ஆடு திருடி மாட்டிக்கொண்டது போல விழித்துக்கொண்டிருந்தது லதா அக்காவே தான்....

Wednesday, January 11, 2012

விதைகளின் வரலாறு - 2

பொங்கல் தேதி இன்னதென்று தெரியும் வரை இருப்பு கொள்ளாது எங்களுக்கு, கடைசியாய் பஞ்சாங்கம் பார்த்து சரியான தேதியை தாத்தா உறுதிப்படுத்தும் வரை தொடரும் அந்தப் பரபரப்பு. தேதி முடிவானதுமே ஜூட் அண்ணன் அடுத்த வேலையை சத்தமில்லாமல் துவங்கிவிடுவார்.

அடுத்து நடக்கும் எல்லா சின்னச் சின்ன சந்திப்புகளிலும் இது குறித்தே பேச்சாய் இருக்கும். அக்டோபர் மாதம் முன்பதிவுக்கான தேதியென்றாலும் அதற்கு ஓரிரு மாதங்கள் முன்னரே ரயில் நிலையம் சென்று முன்பதிவுக்கான படிவங்களை மொத்தமாய்க் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்வார். மொத்தம் 25 பேர் சென்னையிலிருந்து பயணமாவோம், அத்தனை பேரின் பெயர், வயது என்று எல்லாம் வெவ்வேறு கையெழுத்துகளில், வெவ்வேறு பேனாக்கள் கொண்டு நிரப்பப்பட்டு தயாராயிருக்கும் அக்டோபரை எதிர்பார்த்து.

இந்த 25ல் மொத்தம் 8 குடும்பங்கள் போக சென்னையில் வேலை செய்யும், படிக்கும் என்போன்ற உதிரிகளும் அடக்கம். சென்னையில் இருக்கும் நாங்கள் அனைவரும் தீபாவளிக்கு பத்து (எ) பத்மாவதி சித்தியின் வீட்டில் கூடிவிடுவோம். வெறும் நினைவுகளாலேயும், வெடிச் சிரிப்புகளாலேயும் நிரம்பி இருக்கும் எங்கள் எல்லா தீபாவளியுமே.

பத்து சித்தி ரயில்வே மருத்துவமனையில் மேட்ரனாக இருக்கிறார், அயனாவரம் ரயில்வே குவார்ட்டர்ஸில் தான் சித்தியின் வீடு. பழைய ஓட்டு வீடுதானென்றாலும் கொஞ்சம் பெரிய வீடு, சாலைக்கும் வீட்டுக்கும் நடுவே கொஞ்சம் காலியிடம், அதில் அங்கங்கே மரங்களும் செடிகளுமென்று ஆர்ப்பாட்டமின்றி அழகாய் இருக்கும், சாலையின் இருபுறமும் மரங்கள் கிளை பரப்பி நிற்க, வருடம் முழுவதும் பகலில் வெயில் மட்டுமே உலாவிக்கொண்டிருக்கும் சாலையும், வெறும் பறவைகளின் சத்தமும். ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் இலைகளின் இசையுமாய் நிறைந்திருந்த அந்த இடம் அன்றொரு நாள் மட்டும் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று எங்களை வேடிக்கைப் பார்க்கத் துவங்கி விடும்.

ஒரு நாற்காலியில் ரெண்டு மூன்று பேர், ஓரமாய்க் கிடக்கும் மரப்பெட்டியின் மேல் கொஞ்சம், உணவருந்தும் மேசைக்கு மேல், உணவருந்தும் மேசைக்குக் கீழ், தரையில் படுத்தபடி, சுவரில் சாய்ந்து நின்றபடி, இண்டு இடுக்கு சந்து பொந்து என்று எல்லோருமே ஒரே அறைக்குள் எங்களை நாங்களே திணித்துக் கொள்வோம். வெயில் தாழத்தாழ அங்கிருந்து மெதுவாய் நகர்ந்து மாலையில் வீட்டுக்கு வெளியே இருக்கும் காலியிடத்தில் கூடிப் பேசியபடியேயிருப்போம்.

இரவு அவரவர் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்ததும் "சரி அப்ப நாங்க போய்ட்டு வாரோம்" என்று சாலையில் நின்றபடியே தொடர்ந்து கொண்டிருக்கும் பேச்சு மேலும் சில மணி நேரங்களுக்கு, "நாள் பூராம் பேசுனது போதாதாக்கும், ரோட்ல வந்து நின்னும்  பேச அப்டி என்னதான் வச்சிருக்கீக‌" என்று ஏதாவது ஒரு சித்தப்பா சொல்ல "விடுங்க அண்ணாச்சி அக்கா தங்கச்சிக எல்லாம் ஒண்ணா சேர்ந்தா அவுகளுக்கு நேரம் போறதே தெரியாது, எவ்வளவு சந்தோசம் பாருங்க அவங்க மொகத்துல" இது திருமலைச்சாமி சித்தப்பா. அப்போதும் அந்த சாலையின் நிசப்தங்களை கிழித்துக் கொண்டிருக்கும் எங்கள் சிரிப்பை இப்போது வேடிக்கை பார்க்க வந்து சேர்ந்திருக்கும் இரவு...

Tuesday, January 10, 2012

விதைகளின் வரலாறு

ஏதோ தான் மட்டுமே இவ்வுலகை ஆள்வதைப் போல தன் கிளைகளை எல்லா திசைகளிலும் நீட்டி நிமிர்த்திக் கொண்டு ஒரு மௌனியைப் போல நின்று கொண்டிருக்கும் மரத்தைப் பார்க்கையிலெல்லாம் சட்டெனெத் தோன்றும் யார் விதைத்திருப்பார் இந்த மரத்துக்கான விதையையென்று. அப்படி ஒரு விதையைத் தேடி அலையும் சிறு முயற்சி இது

மே மாதம் ஏதோ ஒரு நாள் அன்று அதிகாலையிலேயே அலறியது என் கைப்பேசி. என் ஆழ்ந்த நித்திரையை அன்று கலைத்தது ஜூட் அண்ணன் தான். அது என்னவோ அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தால் மட்டும் அது எனக்கு உற்சாகத்தைத் தவிர்த்து வேறேதும் கொடுப்பதேயில்லை, ஏன்னா அண்ணன் ஆள் அப்படி. கைப்பேசி காதுக்குச் சென்றதுமே "ஏய் தம்பி ஒண்ணுமில்ல பொங்கல் 14th வருதா இல்ல 15th வருதா அடுத்த வருசம்", "எப்ப வந்தா என்னண்ணா ஒரு வாரம் முழுசா போட்றலாம் லீவு" இது நான். "அதுக்கில்ல தம்பி ஒரு calendar ல 14 ந்னு போட்ருக்கு இன்னொன்னுல 15 ந்னு போட்ருக்கு, நீ ஊர்ல கேட்டு சொல்றியா, அப்பதான் டிக்கெட் என்னிக்கு open ஆகுதுன்னு பாக்க சரியா இருக்கும்"

இப்படித்தான் துவங்கும் எங்கள் பொங்கல் ஒவ்வொரு வருடமும். பொங்கல் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் எங்களைப் பொறுத்தவரை எங்கள் வருடம் முழுதுமே வரப்போகும் அந்த நாளுக்காகத்தான் ஏங்கிக் கிடப்போம், நானும் ஜூட் அண்ணாவும் மட்டுமல்ல எங்கள் மொத்த குடும்பமுமே அப்படித்தான். எங்க தாத்தாவுக்கு மொத்தம் பத்து பிள்ளைகள், மூன்று ஆண்களும், ஏழு பெண்களும். அவர்களின் பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் என்று நான்காவது தலைமுறையைத் தொட்டாயிற்று, கிட்டத்தட்ட 100 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் குடும்பத்தின் மக்கள்தொகை.

பொங்கல் நடக்கும் அந்த ஒரு வாரமும் எங்கள் குடும்பத்தின் முகவரி ஒன்றே "திறுக்குறுங்குடி". திருநெல்வேலி தாண்டி வள்ளியூருக்கு அருகே எங்களுக்காக எங்கள் தாத்தாவும் ஆச்சியும் உருவாக்கிக் கொடுத்திருக்கும் சொர்க்கம். இதற்கு முன் சொர்க்கத்திற்குப் போய் வந்து பழக்கமில்லைதான் எனக்கு, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்த ஒரு வாரம் நாங்கள் வாழும் அந்த நொடிகளுக்காக சொர்க்கம் கூட ஏங்கிப் போகும்.

தேடல் தொடரும்...

Tuesday, June 22, 2010

உலகக் கோப்பை கால்பந்தாட்டம்

உலகிலேயே அதிகமான ரசிகர்கள் கொண்டாடும் விளையாட்டு கால்பந்து. ஆட்டம் துவங்கி முடியும்வரை மைதானத்தில் வீரர்களிடம் இருக்கும் அந்த விறுவிறுப்பும் பரபரப்பும், எந்த நொடி என்ன நடக்கும், ஆட்டம் எப்படி மாறும் என்ற உணர்வுகள் வீரர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்கள் முகத்திலும் அப்பட்டமாய் இருக்கும். அந்த அளவுக்கு ஒரு ரசிகனின் உணர்வோடு சற்று அதிகமாகவே நெருங்கிய தொடர்புடையது கால்பந்துதான். அந்த விளையாட்டையும் அவர்கள் சார்ந்த அணியையும் ஒரு வெறியோடு நேசிக்கும் ரசிகர்கள் உலகெங்கும் உண்டு. தங்கள் தேசிய அணி என்றல்லாமல், வருடம் முழுவதும் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் இ.பி.எல். ஸ்பானிஷ் லீக் என்று எல்லாவிதமான போட்டிகளிலும் தங்களுக்கென்று ஒரு அணியைத் தேர்ந்தெடுத்து அந்த அணியின் ஆட்டங்களையும் விடுவதில்லை அவர்கள். நமது ஐ.பி.எல்., எல்லாம் அங்கிருந்து தோன்றியதுதான். இப்படி உலகமே நேசிக்கும் ஒரு விளையாட்டின் உலகக் கோப்பை போட்டிகள் நடந்தால் அது எவ்வளவு பெரிய கோலாகலத் திருவிழாவாக இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் துவங்கி முடியும் வரையில் உலகின் அனேக செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என்று அனைவருமே இதைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பார்கள். நடக்கும் பொழுது மட்டுமல்லாமல் நடந்து முடிந்த பிறகும் வெகு நாட்கள் அதைச் சுற்றியேதான் பல விவாதங்கள் இருக்கும்.
கடந்த முறை ஜெர்மனியில் நடந்த போட்டியில் இத்தாலி அணி உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டி இத்தாலி-ஃப்ரான்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது. துவக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாய் சென்று கொண்டிருக்க, ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் சர்ச்சைக்குரிய ஒரு பெனால்டி மூலம் முதல் கோலைப் போட்டது ஃப்ரான்ஸ் அணி. ஃப்ரான்ஸ் அணியின் மலூடா இத்தாலி அணியின் பெனால்டி வளையத்துக்குள் கீழே விழ, அதற்கு இத்தாலி அணியின் மார்க்கோ மாத்தராசிதான் காரணம் என்று கூறி அந்த பெனால்டி ஃப்ரான்ஸ் அணிக்கு வழங்கப்பட, அதைப் பயன்படுத்தி ஃப்ரான்ஸின் ஜிடேன் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். ஃப்ரான்ஸ் முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிகழ்வுக்கான ஆரம்பப் புள்ளியை ஆராய்ந்து பார்த்ததில் மலூடாவை மாத்தராசி ஏதும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. துவக்கமே பரபரப்பாய் இருக்க, ஆட்டத்தின் இறுதி நொடிகள் அதன் உச்சத்தை எட்டியது. மாத்தராசி ஜிடேனை ஏதோ சொல்லித் திட்ட, அதற்குப் பதிலடியாய் ஜிடேன் அவரைத் தன் தலையால் முட்ட, இன்று அந்த ஆட்டமே அந்த நிகழ்வுக்காக இன்னும் நினைவில் கொள்ளப்படுகிறது. அந்த ஆட்டம் முடிந்து வெகு நாட்களாகியும் ஜிடேனும், மாத்தராசியும் எங்கு சென்றாலும் அவர்களிடம் இது குறித்தே கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னாலும் அதுவும் கூட தலைப்புச் செய்தி ஆனது. வெகு நாட்களுக்குப் பிறகும் கூட அந்தப் பதிவு பல கற்பனைகளுடன் இணையத்தில் சுற்றி வந்ததே அந்த நிகழ்வு நம் மனதில் எவ்வளவு பதிந்து போனது என்பதற்கு ஒரு உதாரணம்.
இப்படி சுவாரசியங்களுக்குக் குறைவில்லாத உலகக் கோப்பை கால்பந்து போட்டி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்காவில் ஜூன் 11 அன்று துவங்கியது. ஆனால் இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளோ 2007 ஆண்டே துவங்கி விட்டது. மொத்தம் 204 அணிகள் பங்கேற்க 2007ஆகஸ்டு மாதம் துவங்கியது தகுதிச் சுற்றுகள். உலகின் அதிகமான நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் ஒலிம்பிக் போட்டிக்கு இணையாக இருந்தது இந்த தகுதிச்சுற்றுப் போட்டிகள். எகிப்து, மொராக்கோ போன்ற நாடுகளைத் தோற்கடித்து உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பைப் பெற்ற தென்னாப்ரிக்கா தவிர மற்ற நாடுகள் போட்டியில் பங்கெடுக்கப் போராடின. தகுதிச்சுற்றுப் போட்டிகளும் சுவாரசியத்துக்குக் குறை வைக்கவில்லை. ஃப்ரான்ஸ், அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த இறுதி தகுதிச்சுற்றுப் போட்டியில் ஃப்ரான்ஸின் தியரி ஹென்றி பந்தைக் கையால் தட்டிவிட்டு அதை அவரது அணி வீரர் கோலாய் மாற்ற, அதை நடுவர் கவனிக்கத் தவற, அந்த கோல் மூலம் அயர்லாந்தை வீழ்த்தியது ஃப்ரான்ஸ். அதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து அயர்லாந்து வெளியேறியது, அதற்குப் பதில் ஃப்ரான்ஸ் தகுதிபெற்றது. இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த ஆட்டம் செல்லாது, மறுபடியும் விளையாடலாம் என்று அயர்லாந்து குமுற, அதெல்லாம் முடியாது என்று ஃப்ரான்ஸ் சொல்ல, நாட்டாமையான ஃபிபாவோ அதற்கு விதிகளில் இடமில்லை என்று சொல்லிவிட, இரண்டு நாடுகளும் கோபமாய் முட்டிக்கொண்டு நிற்க, ஃப்ரான்ஸ் அதிபர் சர்க்கோஸி தலையிட்டு அயர்லாந்து மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் அளவுக்குப் போனது. சுவாரசியங்களுக்குக் குறைவில்லாமல் நடந்து முடிந்த தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அணிகள் 32.
தென்னாப்ரிக்கா, ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ப்ரேசில், போர்ச்சுக்கல், ஜெர்மனி, கேமரூன், கானா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட், டென்மார்க், செர்பியா, பராகுவே, இத்தாலி, ஃப்ரான்ஸ், சிலி, மெக்சிகோ, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஹோன்டுராஸ், அல்ஜீரியா, நைஜீரியா, நியூசிலாந்து, க்ரீஸ், ஸ்லோவேனியா, உருகுவே என்று தகுதிபெற்ற நாடுகளை ஒரு பிரிவுக்கு நான்கு நாடுகள் வீதம் பிரித்து மொத்தம் எட்டுப் பிரிவுகளாக்கி துவங்கியேவிட்டது உலகக் கோப்பை. என்னடா இவ்ளோ நாடு இருக்கே இந்தியா எங்க காணோம்னு தேடுறீங்களா? ஆசிய நாடுகள் பிரிவில் தகுதிச்சுற்றுகளில் போட்டியிட்ட இந்தியா அதுலயே வெளியேறிடுச்சு. ஆனாலும் உலகக் கோப்பை துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய இசையமைப்பாளர்கள் சலீம், சுலைமான் பங்கேற்கிறார்கள். அதனால் நாமளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டில இடம்பெற்றாச்சு, கவலை வேண்டாம்னு நம் செய்தி ஊடகங்கள் நம்மை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
துவங்குவதற்கு முன்னரே இவ்வளவு அமர்க்களமாய் இருக்க அதைவிட அமர்க்களமாய் ஜூன் 11 அன்று துவங்கியது உலகக் கோப்பை போட்டிகள், உலகின் முன்னனி இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என்று ஆர்ப்பாட்டத்திற்குக் குறைவில்லாமல் இருந்தாலும் ஒரு சிறு சோகமும் சேர்ந்து கொண்டது. நிகழ்ச்சியில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. அவரின் கொள்ளுப் பேத்தி நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து போனதும், அதனால் துவக்கவிழாவுக்கு அவரால் வர முடியாமல் போனதும்தான் அந்த சோகத்துக்குக் காரணம். தென்னாப்ரிக்க அதிபர் ஜூமா, .நா. வின் தலைவர் பன் கி மூன், மெக்சிகன் அதிபர் கால்தெரான் என்று பலர் பங்குபெற்றும் நெல்சன் மண்டேலா இல்லாத அந்தத் துவக்க விழா சற்று களையிழந்தே காணப்பட்டது.
இவை எல்லாம் முடிந்து உலகமே நான்கு வருடமாய்க் காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை போட்டிகளில் முதல் போட்டியாக போட்டியை நடத்தும் தென்னாப்ரிக்கா மெக்சிகோவுடன் மோதியது. ஃபிபா தரவரிசைப் பட்டியலில் 17வது இடத்திலிருக்கும் மெக்சிகோ, 83வது இடத்திலிருக்கும் தென்னாப்ரிக்காவை எளிதாய் வீழ்த்திவிடும் என்று ரசிகர்கள் காத்திருக்க, ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் இந்த 19வது உலகக் கோப்பையின் முதல் கோலைப் போட்டு அங்கு கூடியிருந்த உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டது தென்னாப்ரிக்க அணி. கோலைப் போட்டவர் தென்னாப்ரிக்க அணியின் ஷபலாலா. கோல் போட்டதோடு நில்லாமல் அதைக் கொண்டாட ஒரு சிறு நடனமும் ஆடி அந்த உற்சாகத்தை அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார். சற்று நேரம் கழித்து மெக்சிகோவும் ஒரு கோல் போட முதல் ஆட்டம் இருவருக்கும் வெற்றி தோல்வியன்றி முடிந்தது. அதன் பிறகு நடந்த போட்டியில் சென்ற உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய ஃப்ரான்ஸ் அணி உருகுவே அணியைச் சந்தித்தது. ஏற்கனவே அயர்லாந்துடனான தகுதிச்சுற்றுப் போட்டியில் நடந்த நிகழ்வுகளால் உலகின் அனைத்து செய்தி ஊடகங்களும் ரசிகர்களும் இந்த அணி மீது வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்க, ஃப்ரான்ஸின் ரசிகர்களும் சற்று நொந்துபோயே இருந்தனர். அதற்கு மகுடம் வைத்தாற்போல ஃப்ரான்ஸ் அணியின் பயிற்சியாளர் ரேய்மண்ட் டொமெனெக் அந்த அணியின் முதல் நிலை ஆட்டக்காரர் தியரி ஹென்றி அணியின் முதல் 11 வீரர்களில் களமிறங்கமாட்டார், இது எங்கள் புது யுக்தி என்று சொல்லி வைக்க, வெறுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டனர் சில ரசிகர்கள். அதற்கேற்றாற் போல அந்த அணிக்கும் உருகுவே அணிக்குமான போட்டி இரண்டு அணிகளுமே கோல் ஏதும் போடாமல் முடிந்துபோனது. அணிக்குள் சரியான புரிதல் இல்லாததே இதற்குக் காரணம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஜிடேன் வருத்தப்பட்டு பேட்டி அளித்துக்கொண்டிருக்க, என்ன ஆகும் ஃப்ரான்ஸின் நிலை என்பது அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே உள்ளது.
முதல் நாள் நடந்த இரண்டு ஆட்டங்களுமே டிராவில் முடிய, என்னடா இந்த உலகக் கோப்பையே டிரா கோப்பை ஆகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டிருக்க, அதற்குப் பதிலளிக்கும் விதமாக இருந்தது இரண்டாம் நாள் ஆட்டம். ஃபிபா தரவரிசையில் 47 வது இடத்திலிருக்கும் தென்கொரிய அணி 13 வது இடத்திலிருக்கும் க்ரீஸ் அணியைச் சந்தித்தது. லீ ஜிங் சூ, பார்க் ஜி சுங் கோல்களை அடிக்க 2-0 என்ற வித்தியாசத்தில் க்ரீஸை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையின் முதல் வெற்றியைப் பதிவு செய்து க்ரீசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது தென்கொரிய அணி. அடுத்த ஆட்டம் உலகின் தலைசிறந்த அணிகளுள் ஒன்றான அர்ஜென்டினாவுக்கும் நைஜீரியாவுக்குமிடையே நடந்தது. அர்ஜென்டினா அணியின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான மாரடோனா பயிற்சியாளர் பொறுப்பிலிருக்க, மெஸ்ஸி, தவேஜ், ஹிகுவேன், வெரான் என்று அணி அதிரடியாய் இருக்கிறது. ஆனால் அனுபவம் இல்லாத பயிற்சியாளர் மாரடோனா, ஒரு மிகச்சிறந்த வீரர். ஆனால் அவரது தவறான யுக்திகள் அர்ஜென்டினாவைத் தோல்விக்கு இட்டுச்செல்லும் என்று பலர் கருத்துக் கூறிக்கொண்டிருக்க, தனது முதல் போட்டியை 1-0 என்ற கணக்கில் வென்று விட்டது அர்ஜென்டினா. ஒரு வீரராய் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த மாரடோனா ஒரு பயிற்சியாளராய் சாதிப்பாரா என்பது இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் அடுத்தடுத்த ஆட்டங்களில் தெரிந்துவிடும்.அர்ஜென்டினா மட்டும் இந்தக் கோப்பையை வென்றுவிட்டால் ஆடையேதுமின்றி அந்த அரங்கத்தைச் சுற்றி ஓடிவருவேன் என்று வேறு பேட்டி அளித்துள்ளார் மாரடோனா, அதனால் அர்ஜென்டினாவின் ரசிகர்களே சற்று கலங்கிப் போய்தான் உள்ளனர்.
இந்த உலகக் கோப்பைக்கான பந்துகளை வடிவமைத்திருப்பது அடிடாஸ் நிறுவனம். இந்தப் பந்துகளுக்கு ஜபுலானி என்று பெயர் சூட்டி உள்ளனர். ஏற்கனவே இந்தப் பந்துகளைப் பற்றி ஏகப்பட்ட குறை பட்டியல்களை அணிகள் வாசித்தபடி உள்ளன. குறிப்பாக அணியின் கோல்கீப்பர்கள், இந்தப் பந்தின் போக்கைக் கணிப்பது மிக சிரமமாக உள்ளதாக குற்றப்பத்திரிகை வாசித்தபடி இருக்க, அடிடாஸ் நிறுவனமோ பிப்ரவரி மாதமே நாங்கள் எல்லா அணிகளுக்கும் இந்தப் பந்துகளை வழங்கி பழகிக்கொள்ளச் சொல்லிவிட்டோம், ஆனா அவங்க ஒழுங்கா அதைப் பயன்படுத்தாம இப்ப சாக்கு சொல்லக்கூடாதுஎன்று பதிலடி கொடுத்துவிட்டது. அப்படி பயிற்சி செய்யாமல் கோட்டை விட்டதால் ஆட்டத்தையும் கோட்டை விட்டது ஒரு அணி. அது வேறு யாருமல்ல, இங்கிலாந்து தான். பொதுவாகவே இங்கிலாந்து அணியின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. இங்கிலாந்தில் நடக்கும் இ.பி.எல். போட்டிகளில் அனேக இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் சார்ந்த அணிகளுக்கு அவர்கள்தான் முக்கிய வீரர்கள். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு வேய்ன் ரூனி, லிவர்பூல் அணிக்கு ஸ்டீவன் ஜெர்ராட், செல்சிக்கு ஜான் டெர்ரி இப்படி இ,பி.எல்.லின் எல்லா அணிகளிலும் இங்கிலாந்து வீரர்கள் உண்டு. இதுல என்ன குற்றம்னு தான யோசிக்கிறீங்க, இந்த வீரர்கள் இவர்கள் சார்ந்த கிளப் அணிகளுக்கு ஆடும்போது மிகச்சிறப்பாக ஆடுவதும், இங்கிலாந்து அணிக்கு ஆடும்போது சொதப்புவதும் வெகு நாட்களாகவே நடக்கிறது. நம் ஐ.பி.எல். போட்டிகள் மீதிலும், அமெரிக்காவின் என்.பி.. போட்டிகள் மீதிலும் கூட இது போன்ற குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த இ.பி.எல். போட்டிகள் நைக்கி நிறுவனத்தோடு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம்தான் அந்தப் போட்டிகளுக்கான பந்துகளை வழங்கும், அந்தப் பந்துகள் ஜபுலானி பந்துகளில் இருந்து வேறுபட்டவை என்பதால், ஆண்டின் அனேக நாட்களை இ.பி.எல். ஆடிக் கழிக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஜபுலானி பந்துகளைப் பயன்படுத்தும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இதற்கான விலையை அவர்கள் அமெரிக்கா உடன் ஆடிய முதல் போட்டியிலேயே கொடுக்க வேண்டியதாயிற்று.
ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே ஜெர்ராட் ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணியை முன்னனிக்குக் கொண்டுசென்றார். ரூனி, ஹெஸ்கி, லாம்பார்ட், ஜெர்ராட், டெர்ரி, ஜோ கோல் என்ற வீரர்களின் பட்டியலோடு ஒரு கோல் முன்னணி வேறு பெற்ற பிறகு இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் தோற்க வாய்ப்பே இல்லை என்ற நிலையிலிருந்தது. அந்த எண்ணங்களுக்கு முடிவு கட்டுவது போல ஒரு நிகழ்வு ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் நடந்தது. அமெரிக்க அணியின் டெம்ப்சி அடித்த பந்து நேராய் இங்கிலாந்து கோல்கீப்பர் க்ரீனை நோக்கிச் சென்றது. அதிக வலுவில்லாமல் அடித்ததால் டெம்ப்சியே கூட அந்தப் பந்து கோலாக மாறும் என்று நம்பவில்லை. ஆனால் க்ரீன் அந்தப் பந்தின் வேகத்தையும் போக்கையும் கணிக்கமுடியாமல் அதைப் பிடிப்பதற்குத் தடுமாற மெதுவாய் உருண்டு அந்தப் பந்து கோல் வளையத்துக்குள் புகுந்தது. இரண்டு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருக்க எவ்வளவோ போராடியும் இரண்டு அணிகளாலும் வேறு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. க்ரீன் அதன் பிறகு பல வீர தீர செயல்களைச் செய்து வேறு சில கோல்களைத் தடுத்தாலும் அவர் செய்த அந்த சிறு தவறு இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை வெற்று வாய்ப்பாக்கி விட்டது. முதல் சுற்றில் இன்னும் அல்ஜீரியா, ஸ்லோவேனியா உடனான போட்டிகள் மீதமிருக்க எப்படியாவது அதை வென்று விட வேண்டுமென்று காத்திருக்கிறது இங்கிலாந்து. க்ரீன் மனது வைக்க வேண்டுமே என்பது தான் அவர்களின் கவலை.
ஆட்டம் துவங்கிய இரண்டு நாட்களில் நடந்த போட்டிகளிலே இவ்வளவு சுவாரசியங்கள் இருக்க, அடுத்த நாள் நடந்த கானா-செர்பிய அணிகளுக்கு இடையேயான ஆட்டம் வேறு ஒரு சுவாரசியத்தை ஒளித்து வைத்திருந்தது. இரண்டு அணிகளும் விறுவிறுப்பாகவெல்லாம் வேண்டாம், அடுத்த அணி தவறு செய்யும் வரை காத்திருப்போம் என்பது போலவே ஆடிக் கொண்டிருக்க, ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் அந்தத் தவறைச் செய்தார் செர்பிய அணியின் குஜ்மானோவிக். செர்பிய அணியின் பெனால்டி வளையத்துக்குள் பறந்து வந்த பந்தை அவர் பறந்து போய் கையை நீட்டித் தொட, அவருக்கு மஞ்சள் அட்டை கொடுத்துவிட்டு கானா அணிக்கு பெனால்டி வாய்ப்பைக் கொடுத்தார் நடுவர். வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டார் கானா வீரர் க்யான். கானா வெற்றி பெற்ற அந்த ஆட்டமும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. ஆப்ரிக்க நாடுகள் நடத்தும் முதல் உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்த முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையையும் சேர்த்து வென்றது கானா. ஆட்டம் முடிந்து வெகு நேரம் ஆகியும் அந்த அணியின் வீரர்கள் ஆடுகளத்தில் நடனம் ஆடிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் வியர்வைத் துளிகளில் நனைந்து கொண்டிருந்தது வெற்றி.
இது இப்படியிருக்க அன்றிரவு நடைபெற்ற ஜெர்மனி, ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம், ஜெர்மன் அணியின் திறமையை உலகுக்கு அறிவிக்கும் களமாகிப் போனது. இந்த உலகக் கோப்பைக்கு வரும் முன்னரே ஜெர்மனிக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. அந்த அணியின் தலைவர் மைக்கேல் பல்லாக், உலகின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவர். இவர் உலகக் கோப்பை துவங்க ஒரு மாதம் முன்பு இ.பி.எல். போட்டிகளில் செல்சி அணிக்காக ஆடிய ஆட்டத்தில் எதிரணி வீரர் கெவின் பிரின்சுடன் மோதி இவரது குதிகால் தசை கிழிந்து விட்டது. அதனால் உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து அவர் விலகிக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பல்லாக்கோ இது திட்டமிட்டே நடத்தப்பட்ட செயல் என்று குமுறிக்கொண்டிருக்கிறார். காரணம் வேறொன்றுமில்லை. இந்த கெவின் பிரின்ஸ் பிறப்பால் ஒரு ஜெர்மானியர். ஆனால் தற்பொழுது கானா அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அதுவல்ல காரணம், கெவின் பிரின்ஸின் கடைக்குட்டி தம்பி ஜெரோம் தற்போதைய ஜெர்மன் உலகக் கோப்பை அணியில் இருக்கிறார். அவருக்காகத் திட்டமிட்டே பல்லாக்கை முடக்கி மூலையில் உட்காரவைத்துவிட்டார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து ஒரு காரணத்தைத் தலைப்புச் செய்தியாக்கி கொஞ்சம் காசு பார்த்துவிட்டன அந்த ஊர் செய்தி ஊடகங்கள். ஆனால் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் முதல் ஆட்டத்திலேயே தூள் பறத்திவிட்டது ஜெர்மனி.
ஆட்டம் துவங்கியது முதலே ஜெர்மனியின் ஆட்டத்தில் பொறி பறந்தது. பொடோல்ஸ்கி, காகாவ், முல்லர், க்ளோசே, ஸ்வான்ஸ்டெய்கர் என்று அந்த அணியின் முன்னணி வீரர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு வளையத்தை அடிக்கொருமுறை உடைத்து நொறுக்கி கோல்களைக் குவித்துக் கொண்டிருந்தார்கள். சராசரி வயது 30ல் இருக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்களால் ஜெர்மன் அணியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போக, 4-0 என்ற கணக்கில் ஆட்டத்தை எளிதாய்க் கைப்பற்றியது ஜெர்மன் அணி. ஜெர்மன் அணியின் இந்த ஆட்டத்துக்கு இன்னொரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, வேறேதுமன்றி அந்த ஜபுலானி பந்துகள்தான். ஜெர்மனியின் கிளப் லீக்குகளுக்கு புண்டிஸ்லீகா என்று பெயர். இந்தப் போட்டிகளுக்கு அடிடாஸ் நிறுவனம்தான் பந்துகளை வழங்கும். அதனால் அந்த அணிகள் இந்த ஜபுலானி பந்துகளைப் பயன்படுத்தி அனுபவப்பட்டதால் தான் ஆஸ்திரேலியாவை இப்படி அடித்து துவைத்து துவம்சம் செய்ய முடிந்தது ஜெர்மனியால் என்று கொளுத்திப்போட்டிருக்கிறார்கள் வல்லுனர்கள். ஆனால் எதைப்பற்றியும் கவலையின்றி அடுத்த போட்டிகளுக்குத் தயாராகி வருகிறது ஜெர்மனி. ஆஸ்திரேலிய அணியோடு அவர்கள் ஆடிய ஆட்டத்தை தொடர்ந்து ஆடினால் கோப்பை அவர்களுக்கு ரொம்பவே தூரமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இது இப்படியிருக்க, நெதர்லாந்து, டென்மார்க் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்த உலகக் கோப்பையின் முதல் ஓன் கோல்பதிவானது. டென்மார்க் வீரர் சைமன் பந்தைத் தலையால் தட்டிவிட அது அந்த அணியின் மற்றொரு வீரரின் பின்னால் பட்டு வலைக்குள் புகுந்து நெதர்லாந்து அணிக்கான கோலாக மாறியது. தனது அணிக்கு எதிராகத் தானே அடுத்த அணிக்கு ஒரு கோல் போட்டுக் கொடுப்பது என்பதுதான் அது. சொந்த செலவில் சூன்யம் என்பார்களே அப்படி. பொதுவாகவே ஏதாவது சிறு தவறே இதற்குக் காரணமாகி விடும். ஆனால் அந்தத் தவறைச் செய்த வீரரின் நிலைதான் ரொம்பப் பரிதாபம். ரசிகர்கள், ஊடகங்கள் என்று எல்லோரும் சேர்ந்து அவரை ஒரு வழியாக்கி விடுவார்கள். ஒரு முறை இந்தத் தவறைச் செய்ததற்காக ஒரு வீரர் கொல்லப்பட்டதும் நடந்திருக்கிறது. 1994 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் அமெரிக்காவும் கொலம்பியாவும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் கொலம்பிய வீரர் ஆந்த்ரே எஸ்கோபார் ஓன் கோல் அடித்து கொலம்பியாவின் தோல்விக்குக் காரணமானார். சற்று நாட்கள் கழித்து சுட்டுக்கொல்லப்பட்டார் எஸ்கோபார், அவரைச் சுட்ட நபர் ஒவ்வொரு குண்டு அவர் மீது பாயும்போதும் "கோல்", "கோல்" என்று கத்திக்கொண்டே சுட்டதாகவும், இதற்கு அவர் அடித்த அந்த கோல்தான் காரணம் என்று பரவலான கருத்து ஒன்று உண்டு. கால்பந்து ஆட்டம் ரசிகர்களால் எந்த அளவு கவனிக்கப்படுகிறது என்பதற்கும், போட்டிகளின் முடிவுகள் எந்த அளவுக்கு ரசிகர்களைப் பாதிக்கிறது என்பதற்கும் இது ஒரு சிறு உதாரணம்.
இன்னும் பல முக்கிய அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களுக்காகக் காத்திருக்க, இப்பொழுதே ஏக பரபரப்பாய் இருக்கிறது இந்த உலகக் கோப்பை போட்டி. என்ன இருந்தாலும் இந்த உலகக் கோப்பையின்போது இந்திய வீரர்களைப் பார்க்க முடியாதே என்ற வருத்தமே நமக்கு வேண்டாம். பெரும்பாலான செய்தி நிகழ்ச்சிகளில் அமர்ந்து இன்று என்ன தவறு செய்ததால் அந்த அணி தோற்றது, என்ன செய்தால் வென்றிருக்கலாம் என்றெல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது அவர்கள்தான். அந்தக் கருத்துகளையெல்லாம் அவர்கள் விளையாடும் போதும் உபயோகப்படுத்தினால் நிச்சயமாய் நாமும் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கலாம். வீரர்களும், நிர்வாகிகளும் மனது வைக்க வேண்டுமே. அதுவரை மற்ற நாடுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3057

Monday, March 8, 2010

தெளிவைத் தொலைத்ததால் தொலைந்து போகும் கவிதையான நொடிகள்

ஒரு புகைப்படத்தில் நம் கண்கள் முதலில் தேடிப் பிடிக்கும் எல்லாமே தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்கும் பகுதிகள்தான். தெளிவற்று சற்று மங்கலாய் இருக்கும் பகுதிகளை ஒதுக்கிவிடவே துடிக்கும் நமது கண்கள், அதுதானே இயல்பு. இப்படித் தெளிவாய் இருப்பவைதான் புகைப்படக்கருவி செய்த பகுதிகள். அது தவிர்த்து சட்டகத்தில் மழுங்கிப் போய் இருக்கும் மற்றவற்றை out of focus என்று அழைப்பார்கள்.
, out of focus நம் கண்கள் எதைப் பார்த்தாலும் அது நமக்குத் தெளிவாய்த் தெரியும். நாம் உற்று நோக்கும் அந்தப் பொருள் தவிர, மற்றவை சற்று மங்கலாகவே இருக்கும். அது போல ஒரு புகைப்படத்திலும் அதை உருவாக்குபவர் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதைத் தெளிவாய்ப் படம் பிடித்திருப்பார், நம் கவனம் வேறு எங்கும் சிதறிவிடா வண்ணம் ஆக்க அமைவோடு அது அமைந்துவிட்டால் அது பார்வையாளரை எளிதில் சென்றடைந்துவிடும்.
பொதுவாகவே புகைப்படக் கருவிகளில் இரண்டு விதமான focus வசதிகள் உண்டு. ஒன்று, auto focus. இது அப்போது இருக்கும் ஒளி அமைப்பைப் பயன்படுத்தி புகைப்படக் கருவியே எதைக் கூர்மையாய்க் காட்ட வேண்டும் என்று தேர்வு செய்து விடும், மற்றொன்று, manual focus. நாமே நமக்கு எது தேவையோ அதைக் கூர்மையாய்க் காட்டும்படி புகைப்படக் கருவியைத் திருத்தி அமைத்துக் கொள்வது.


Focus என்பது ஒரு புகைப்படத்தில் எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்று முதல் படத்தின் மூலம் உணரலாம். எத்தனையோ கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். வேறொரு நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நம் நாட்டுப் பெண்ணொருத்தி பூச்சூட்டுகிறாள், வந்தாரை வரவேற்கும் தமழனின் மரபைப் பளிச்சென்று படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புகைப்படம். பூக்களுக்குப் பழகாத அந்தப் பெண்ணின் கூந்தலில் கவனமாய்ப் பூச்சூட்டி விடும் அந்த தமிழ்ப் பெண்ணின் நேர்த்தி, தெருவோரமாய்த்தான் நடக்கிறது என்று நமக்குணர்த்தும் பின்னணி, அந்த வெளிநாட்டுப் பெண்ணின் புன்னகையில் தெறிக்கும் நாம் மெதுவாய்த் தொலைத்துக் கொண்டிருக்கும் - நம் பண்பாட்டின் சுவடுகள். நம் கண்களை அதிகம் உறுத்தாத நிறங்கள் என்று எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் இந்தக் கதைகளைச் சொல்லும் அந்த இரண்டு பெண்களுமே தெளிவற்று இருப்பது இந்தப் புகைப்படத்தின் அழகை வெகுவாய்க் குறைத்து விடுகிறது.
அந்தப் பெண்கள் தெளிவில்லாமல் மழுங்கலாய்த் தெரிய, பின்னணியில் உள்ள வாசல், கதவு இவை எல்லாம் மிகவும் தெளிவாய் இருக்கிறது. அதனால் நம் கண்கள் அந்தப் பெண்களின் இயல்புகளில் ஊன்றாமல் அவர்களுக்குப் பின்னால் தெளிவாய் இருக்கும் மற்ற தேவையற்ற பொருட்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. ஒரு மிகச்சிறந்த நொடியைப் பதிவு செய்த இந்தப் புகைப்படம் அதை சற்று தெளிவாய்ச் செய்யாததால் அந்த நொடியின் உன்னதமே குறைந்துவிடுகிறது.

இரண்டாவது படம் சரியாகக் கையாளப்பட்டால் focus எப்படி ஒரு படத்தை மெருகேற்றும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு பச்சோந்தியின் படம். இந்தப் புகைப்படத்தில் பச்சோந்தி மட்டும் பளிச்சென்று நம் கண்களில் ஒட்டிக்கொள்கிறது, சரியாக focus செய்யப்பட்டதால் மிகத் தெளிவாய்ப் பதிவுசெய்யப்பட்டுள்ளது அந்தப் பச்சோந்தியின் உடல். 
எந்த இடையூறுமில்லாத பின்னணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். மிகச் சீரான வெளிச்சம் பரவியுள்ள சட்டகம், மேலும் பச்சோந்தி சட்டகத்தின் நடுவில் அல்லாமல் சற்று ஓரமாக வைத்துக் கையாளப்பட்டிருக்கும் ஆக்க அமைவு. இவை எல்லாவற்றையும் விட இதைப் படம் பிடித்தவர், நாம் பார்க்க வேண்டும் என்று நினைத்துப் படம்பிடித்த பச்சோந்தியின் உடல் பாகங்கள் எல்லாம் தெள்ளத்தெளிவாய்த் தெரிவதுதான் இந்தப் படத்தை முழுமை அடைய வைக்கிறது. அந்த உடலில் பரவிக்கிடக்கும் பச்சை நிறம், அதன் தோலில் நிறைந்திருக்கும் தொடுபரப்பு (Texture), அதே பச்சை நிறத்தில் தனித்து நிற்கும் அதன் கண், ஒரு இளஞ்சிவப்பு நிறத்திலான அதன் வாயின் உட்புறம், இவை அனைத்திற்கும் மேலாக அதே இளஞ்சிவப்பு நிறத்தில் அதன் பச்சை நிற உடலில் இருந்து வேறுபட்டுத் தெரியும் அதன் நாசித் துவாரம். இப்படி மிகச்சிறிய விவரங்கள் கூட தெளிவாய்ப் பதிவானதற்குக் காரணம், இந்தப் புகைப்படத்தில் focus சரியாகக் கையாளப்பட்டிருப்பதுதான்.


இந்த மூன்றாவது படம், ஒரு பெண்ணின் பாதங்கள் கடந்து செல்லும் நொடியைப் பதிவு செய்திருக்கிறது. வெகு சாதாரணமான ஒரு நிகழ்வை ஒரு கவிதையைப் போல் பதிவு செய்திருக்கிறது இந்தப் புகைப்படம். தங்கக் கொலுசுகளைச் சுமக்கும் இரண்டு பாதங்கள், அந்த தங்கக் கொலுசுகளுக்கு ஏற்றாற் போல் அதே நிறத்தில் சற்று உயர்த்திப் பிடிக்கப்பட்ட பட்டுப்பாவாடை, அவள் நடந்து செல்வதைப் பார்ப்பவர் உணரும் விதத்தில் தூக்கியபடி இருக்கும் ஒரு பாதம். அதிகம் நெருடலில்லாத பின்னணி.
ஒரு தேவதையின் மென்மையைத் தாங்கியபடி சட்டகத்தைக் கடந்து செல்லும் பாதங்கள், அந்தப் பாதங்களின் அழகில் தோற்றுவிட்டேன் நான் என்று சொல்வது போல தலைகுனிந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள அந்த  சாணத்தின் மீது பூத்திருக்கும் வாடிப்போன அந்தஒற்றை பூசணிப் பூ. சட்டகத்தின் நடுவில் வந்து இந்தப் புகைப்படத்தின் அழகைக் குலைக்காமல் அந்தப் பாதங்கள் சட்டகத்தை விட்டு வெளியேறும் முனையில் இருந்து அந்த அழகை இன்னும் மெருகேற்றுகிறது அந்தப் பூ. 
அந்தப் பூவையின் பாதங்கள் சட்டகத்தைக் கடப்பதும், சட்டகத்தில் அந்த ஒற்றைப்பூ இருக்கும் இடமும் அழகாகக் கையாளப்பட்டுள்ள ஆக்க அமைவிற்கான அடையாளங்கள். இந்தப் படத்திலும் ஒருவேளை focus அந்தப் பாதங்களை விடுத்து அந்தப் பூவிலோ அல்லது பின்னணியிலோ இருந்திருந்தால் அந்த தேவதையின் பாதங்களின் அழகும் கூட தொலைந்து தான் போய் விட்டிருக்கும்.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2605

Monday, March 1, 2010

முகங்களற்ற உணர்வுகளின் முகவரிகள்

மனிதனின் உள்ளுணர்வுகளை ஊடுருவிப் படம் பிடிக்க அவசியமில்லாமல் செய்துவிட்ட ஒரு அற்புதம், மனிதனின் முகம். மனதின் எண்ண ஓட்டங்களை வெளி உலகிற்காக சுமந்து கொண்டிருக்கும் சுமைதாங்கிகள்தான் முகங்கள். இயல்பான முகங்கள் எப்படி மனிதனின் உணர்வுகளை வெளிக்கொணரும் என்பதை நாம் அறிவோம், ஆனால் ஒரு மனிதனின் முகத்தை சட்டகத்துள் கொண்டு வராமல் உணர்வுகளைப் படம் பிடிப்பதும் ஒரு கலைதான்.
நமது திரைப்படங்களில் ஒரு காட்சி உண்டு, ஒரு ஆணும் பெண்ணும் விரும்புவார்கள், ஆண் தன் விருப்பத்தை சொன்னதும், பெண் தன் கால் பெருவிரலால் தரையில் கோலம் போடுவாள், அவளும் அவனை விரும்புகிறாள் என்பதை வெறும் கால் பாதங்களை மட்டுமே வைத்து ஒரு பார்வையாளனுக்கு உணர்த்தி விடும் இந்தக் காட்சி.
இது போல பல உணர்வுகளை வெறும் கைகள், கால்கள் என்று ஒரு மனித உடலின் சில பாகங்களை மட்டுமே சட்டகத்திற்குள் கொண்டு வந்து அந்த மனிதனின் உணர்வுகளை அந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவர்க்கு உணர்த்த முடியும். சரியான ஆக்க அமைவு (composition) இது போன்ற புகைப்படங்களுக்கு அவசியம். புகைப்படங்களில் கோடுகளோ அல்லது வளைவுகளோ (lines and curves) இருக்கையில் அவை சட்டகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து துவங்குவது போல் படம் பிடித்தால், அவை பார்வையாளரின் கண்களை அந்தக் கோடு துவங்கும் புள்ளியில் இருந்து புகைப்படத்தினுள் வழி நடத்திச் செல்லும். இதை leading lines என்று அழைப்பார்கள்.


இந்த முதல் படத்தைப் பார்ப்போம், எதையோ எதிர்பார்த்து நீளும் ஒரு கரம், தன்னிடம் ஏதோ இல்லை, உங்களால் இயன்றதைக் கொடுங்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல இயலாமல் ஒரு செய்கையின் மூலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது, என் தேவைகள் என்னிடம் இல்லாமல் போனதற்கு என் முதுமை கூட ஒரு காரணமாய் இருக்கலாம் என்பதை உணர்த்துவது போல அந்தக் கரங்களில் தெரியும் சுருக்கங்கள். சற்றே இருள் நிரம்பிய என் உலகிற்குள் நான் ஒளியை யாசிக்கிறேன் என்று கேட்பது போல, சற்று இருண்ட மூலையில் இருந்து துவங்கினாலும் எங்கிருந்தோ வரும் ஒளிக்கீற்றில் நனைந்து கொண்டிருக்கும் அந்த உள்ளங்கை. புகைப்படத்தில் இருக்கும் உணர்வுகளை மேலும் ஆழமாய் வெளிக்கொணரும் பின் தயாரிப்பு.
புகைப்படத்தில் அங்கங்கே சில நெருடல்களும் இருக்கவே செய்கின்றன, ஆனால் அவையும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலை உணர்த்துவதால் அவை கூட ஒரு விதத்தில் இந்தப் புகைப்படத்தில் உள்ள‌உணர்வுகளை ஆழமாய் சித்தரிக்க‌வே உதவுகிறது. இங்கே அந்தக் கை துவங்கும் இடம் சட்டகத்தின் ஒரு மூலையில் உள்ளதால் அங்கிருந்து அந்தக் கோடு நம் கண்களை வழி நடத்தி உள்ளங்கையில் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்தப் புகைப்படத்தை உருவாக்கியவர் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை நாம் பார்ப்பது இந்தப் புகைப்படத்தின் ஆக்க அமைவு சரியாய் அமைந்ததால்தான்.



 
இரண்டாவது படம் ஒரு மழலையின் தீண்டலை உணர்த்துகிறது, பிஞ்சு விரல்கள் அந்த சிவந்த பாதங்களோடு விளையாடுகையில் அந்த நொடிகளின் மென்மையையும் உன்னதத்தையும் முகமில்லாமல் வெறும் ஒரு கையும் காலும் மட்டுமே சட்டகத்திற்குள் வைத்து உணர்த்துகிறது இந்தப் புகைப்படம். இங்கும் ஆக்க அமைவு சரியாக கையாளப்பட்டிருப்பதுதான் இந்தப் புகைப்படத்தின் பலம். சட்டகத்தின் முனையில் இருந்து நீளும் அந்தக் கைகள் அத‌ற்கே உரிய மென்மையோடு நம்மை அந்தப் பாதங்களுக்கு வழி நடத்திச் செல்கின்றது, அந்த விரல்களும் பாதங்களும் மோதும் புள்ளியில் நம் கண்கள் ஊன்றிவிடுவதற்கு மற்றொரு காரணம் இந்தப் புகைப்படத்தின் பின்னணி, அதிக நெருடலில்லாமல் இந்தப் படம் சொல்லவிரும்பும் உணர்வை எந்த விதத்திலும் குலைத்துவிடாமல் இருப்பதும் பின்னணியாலும்தான். இவை எல்லாம் சேர்ந்து அமைந்ததால்தான் இந்தப் புகைப்படம் பார்க்கும் நம்மையும் அந்த உணர்வுகளுக்குள் இழுத்துச் செல்கிறது.

மூன்றாவது படமும் கூட வெறும் கைகளை மட்டுமே வைத்து ஒரு உணர்வைக் கதை போல் பேசுகிறது. வயது முதிர்ந்த ஒருவர் தன் வாழ்க்கையில் சொல்லாமல் விட்டுவிட்ட நன்றிகளைச் சொல்வது போல ஒரு உணர்வைத் தருகிறது இந்தப் படம். சுருக்கம் விழுந்த கைகள், இறுக்கமாய் அல்லாமல் சற்றே வலுவில்லாமல் குவிக்கப்பட்ட கரங்கள், பின்னணியில் இருக்கும் வேறு ஒருவரது கைகள். அதிக நெருடலில்லாத சட்டகம், மிக வலுவாய் அமைந்துவிட்ட பின்னணி இவைதான் இந்தப் படத்தின் பலம்.
புகைப்படத்தின் வலது கீழ் மூலையில் கைகள் துவங்கும் இடத்தில் சற்று உறுத்திக்கொண்டிருக்கிறது ஏதோ ஒரு பொருள். அது இந்தப் படத்தின் ஆக்க அமைவில் ஒரு குறைதான் என்றாலும், அதை நம் கண்கள் கடந்து கைகளுக்குச் சென்ற உடன் அங்கிருந்து நம் கண்களை வேறு ஏதும் ஈர்ப்பதில்லை. அந்தக் கரங்கள் எந்த உணர்வை வெளிக்காட்ட குவிந்ததோ அதை முகங்களின் உதவியில்லாமல் சற்றும் குறைவில்லாமல் பதிவு செய்துள்ளதே இந்தப் புகைப்படத்தின் பலம்






http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2575

Monday, February 22, 2010

சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்

மனித முகங்களை படம் பிடித்தலில் இருக்கும் ஆனந்தமே தனி தான். வீடுகளில் இன்னும் பழைய புகைப்படங்களை மாட்டி வைத்திருப்போம் பலரும். சொல்லிவைத்தாற் போல இந்தப் புகைப்படங்களில் இருக்கும் எல்லா முகங்களுமே நம்மையே வெறித்துப் பார்த்தபடி இருக்கும். வேறு எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் ஒரு இறுக்கமான புன்னகையுடன் நம் வீடுகளை அலங்கரிக்கும் இத்தகைய‌ புகைப்படங்கள் ஏராளம்.
மனித முகங்களைப் படம் பிடிக்கும் பொழுது முடிந்தவரை அவர்கள் இயல்பாய் இருக்கும் நொடியில் படம் பிடித்தால் அந்தப் படத்திற்க்கே ஒரு தனி அழகு வந்துவிடும். இப்படிப் பட்ட படங்களை Candid என்று அழைப்போம். Candid என்றால் கபடமில்லாத அல்லது நேர்மையான ஒரு நொடி என்று சொல்லலாம், அல்லது நாம் நாமாய் இருக்கும் தருணம். நம் வீட்டில் அமர்ந்து உணவருந்தும் போது எதைப் பற்றியும் கவலையின்றி சோற்றை கைகளால் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அதே ஒரு உயர்தர உணவகத்தில் அமர்ந்திருந்தால் தோசையைக் கூட கரண்டியால் சாப்பிடுவோம். முதல் வகை தான் Candid, எதைப் பற்றியும் கவலையின்றி நாம் நாமாய் இருக்கும் நொடி; இரண்டாவது வகை Posing . அதாவது பாவனை. நாம் ஒன்றும் குறைந்தவரில்லை என்று காட்டுவதற்காக நம் இயல்பை மீறி நாம் செய்யும் ஒரு செயல்.
ஒருவர் இயல்பாய் இருக்கையில் படம் பிடித்து அதை அவர்களிடம் காட்டும் பொழுது அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி "பாக்கும் போது எடுத்திருக்கலாம்ல" என்பதுதான். அப்படி எடுப்பதில் இருக்கும் ஒரே பின்னடைவு நம்மில் பலருக்கும் புகைப்படக் கருவியைப் பார்த்தபடியே இயல்பாய் இருப்பது முடியாது என்பது. நேருக்கு நேராய் அதைப் பார்த்தப்படியே மிகவும் செயற்கையான ஒரு புன்னகையையும் போர்த்திக் கொண்டு நின்று விடுவோம் தோசையைக் கரண்டியால் சாப்பிடுவது போல, சுருக்கமாய் சொன்னால், pose கொடுப்போம். வெகு சிலரால் மட்டுமே புகைப்படக்கருவியை பார்த்தபடியே இயல்பாய் இருக்க முடியும் அது ஒரு தனி கலை.

இப்படிப்பட்ட நேருக்கு நேராய் எடுக்கப்படும் புகைப்படங்கள் எவ்வளவு தான் அழகாய் இருந்தாலும் உயிரற்று இருப்பது போல இருக்கும். இந்த முதல் படத்தில் உள்ளவர் வலிகளின் சுமையை தன் தோலின் சுருக்கங்களில் அடக்கிக் கொண்டு தெருக்களின் அரவணைப்பில் வாழ்க்கையைத் தேடுபவர். காயம் சுமந்த நெற்றி, மனதின் காயங்களை ஆற்றமுடியாமல் தவிக்கும் தவிப்பை தலைமுடிக்கும் தாடிக்கும் இடையே ஒளிந்து கொள்ள‌விடாமல் போட்டு உடைக்கும் அந்த முகம், ஏக்கம் சுமந்த அந்தப் பார்வை -- இப்படி தொலைந்து போன ஒரு வாழ்வின் அடையாளமாய் ஒரு உருவம். பின் தயாரிப்பின் மூலம் இன்னும் ஆழமாய் வெளிக்கொணரப்பட்டுள்ளன இந்த உணர்வுகள்.
இந்தப் புகைப்படத்தில் பிண்ணனியும் ஒரு குறை தான்; ஆனால் இந்தப் படத்தின் வீரியத்தை வெகுவாகக் குறைத்து விடுவது நேருக்கும் நேராய் அவர் புகைப்படக் கருவியைப் பார்த்தபடி இருப்பதுதான். மனித முகத்தைப் படம் பிடிப்பதன் நோக்கமே நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும் மனித இயல்புகளை பதிவு செய்வதுதான். ஒருவேளை இந்த மனிதர் இயல்பாய் இருக்கையில் இவரைப் பதிவு செய்திருந்தால் இவர் சுமந்து கொண்டிருக்கும் வலிகளை இன்னும் ஆழமாக உணர்த்தி இருக்கக் கூடும்.
இந்த இரண்டாவது படத்தைப் பார்த்தால் இயல்பாய் ஒரு நொடியைப் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பது நமக்கே தெரிந்துவிடும்.

தெருவோரம் பூக்களை விற்கும் ஒரு பெண்; பெரும்பாலும் வியாபாரத்திலேயே கவனமாய் இருக்க வேண்டிய கட்டாயம், வெயிலோ மழையோ அன்றைய பூக்களை அன்றே விற்றாக வேண்டும். அன்று மிஞ்சிப் போவதெல்லாமே குப்பைக்குத்தான். இந்த சிந்தனைகளூடே நகர்ந்து கொண்டிருக்கும் நொடிகளில், அவளைக் கடந்து செல்லும் அந்தக் கால்களுக்குச் சொந்தமான மனிதரின் ஏதோ ஒரு செய்கையால் ஏதோ ஒரு நொடியில் தெறித்து விழுந்தது தான் இந்தப் புன்னகை; அடுத்த நொடியில் மறைந்து போகக் கூடிய‌ ஒரு அற்புதமான தருணம் அவர் இயல்பாய் இருக்கையில் வெகு இயல்பாய் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் இந்தப் புகைப்படத்தின் பலம். எப்பொழுது இந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலும் பார்ப்பவர் உதடுகளிலும் ஒரு இயல்பான புன்னகை தோன்றும். இதுபோல ஒரு உணர்வை வெகு எளிதாய் நமக்குள் ஏற்படுத்தும் திறன் தான் ஒரு புகைப்படத்தின் உயிர்.

இந்தப் படமும் அப்படித்தான்: நாம் அடிக்கடி விவாதிக்கும் பள்ளிக் குழந்தைகள் சுமக்கும் புத்தக மூட்டை. நாம் எவ்வளவு தான் வார்த்தைகளில் வடித்தாலும் அவர்கள் அந்தப் புத்தகப்பையை எவ்வளவு சிரமத்துடன் சுமக்கிறார்கள் என்பதை விளக்குவது கடினம். இந்தப் புகைப்படத்தில் அத்தகைய ஒரு நொடி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படத்திலும் பிண்ணனி ஒரு குறைதான். பின்னால் தெரியும் நிறங்கள் நம் கண்களை அந்த சிறுவனிடம் ஊன்றவிடாமல் செய்கிறது; ஆனாலும் இது போல ஒரு முற்றிலும் இயல்பான நொடியைப் பதிவு செய்கையில் நம் கவனம் முழுவதும் அந்த ஒரு நொடிக்காகவே காத்திருக்கும். அது நடந்தேறுகையில் பதிவு செய்யப்பட்டால் அந்தப் புகைப்படத்தின் அழகு அதிலிருக்கும் குறைகளையும் தாண்டி அதைத் தூக்கி நிறுத்தும். ஆம் அவ்வளவு வலிமையானவை மனித இயல்புகள்.
பொதுவாகவே நாம் யாரை புகைப்படம் எடுக்கிறோமோ அவர் மிகவும் இயல்பாய் இருக்கும் ஒரு நொடியை பதிவு செய்தால் அதன் அழகே தனிதான். அப்படிப்பட்ட புகைப்படங்களை பின்னாளில் புரட்டிப் பாருங்கள்: எட்டிப் பார்க்கும் ஒரு துளி கண்ணீரோ அல்லது உதடுகளில் சட்டென்று வந்து ஒட்டிக்கொள்ளும் புன்னகையோ இலவசம்.


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2549