Friday, January 30, 2009

பெண் என்னும் உன்னதம் - 3

ஒரு பெண் இங்கே எப்படிப் பார்க்கப்படுகிறாள்? இதிலென்ன கேள்வி பெண்ணாகவே பார்க்கப்படுகிறாள் அதுதானே அவளின் அடையாளம், இதுவே பதிலாக வரும். ஆனால் அவளை அடையாளப் படுத்துகிறோம் என்ற பெயரில் அவளின் சுயசிந்தனை அழிக்கப்படுவதே அங்கேதான்.

அவள் பெண் என்ற பெயரில் அடிமைப்படு்த்தப்பட்டு, தனிமைப்படுத்தப்ப‌டுகிறாளே ஒழிய எங்குமே ஒரு சகமனுஷியாக அவள் அங்கீகரிக்கப்படுவதே இல்லை. ஏன் அவளே கூட அதை உணர்வதில்லை. இங்கே பெண்ணுக்கான வரையறைகள் என்று பாடப்படுவது எல்லாமே தப்புத்தாளங்களாகவே உள்ளன. அதையே சங்கீதம் என்று நம்பி அவளும் தலையாட்டி ரசிக்கிறாள்.

எந்த‍ப் பூவுமே பறிக்கப்படுவதற்காக பூப்பதில்லை, ஆனால் பறித்துவிட்டோம் என்பதற்காக சொல்லப்படும் காரணங்களே அவை பிறந்ததின் காரணமாக சொல்லப்படுவது போல், அவளுக்குக் காயங்களை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டு அதற்கு அவள் பெண்ணாகப் பிறந்ததையே காரணமாக்கி, அவளுக்கு அவளையே சிறையாக்கிவிட்டது வேறெதும் அன்றி தலைமுறைகள் தாண்டி இன்று வேரூன்றியே விட்ட அந்த தப்புத்தாளங்கள் தான், அதற்கு சுருதி சேர்த்து இன்னும் கச்சேரி நடத்திக்கொண்டிருப்பது யாரென்பது ஊரரிந்த ரகசியம்.

இங்கே பெண் பிறந்ததும், அவளுக்கான வாழ்க்கை அவளைத் தவிர அனைவராலும் நிச்சயக்கப்பட்டு விடுகிறது. அவள் வாழும் முறை அனைத்தும் நாளை அவளுக்கு வரப்போகும் கணவன் என்ற தொலைதூரப் புள்ளியின் மனதைக் கோணாமல் பார்த்துக் கொள்ளும் கோணல் கோடுகளாகவே அமைகிறது.

அவள் மனம்விட்டு சிரித்தால் கூட அந்த புன்னகை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை தண்டிக்கப்படும் பொழுதும் பொத்துக் கொண்டு வெளியே வரக் காத்திருக்கும் கண்ணீரை அடக்கிக் கொண்டு 'ஏன்?' என்று அவள் கண்கள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, அது கேட்காமல் இங்கே பல செவிகள் தான் இன்னும் செவிடாகவே உள்ளன.

பூக்கள் இன்னும் பூத்துக்கொண்டு தான் இருக்கின்றன, அவைகளை பறிக்காமல் ரசித்துதான் பார்க்கலாமே? ரசித்து விட்டு வாருங்கள் மேலும் பேசுவோம்...

Thursday, January 29, 2009

பெண் என்னும் உன்னதம் - 2

முந்தய காலங்களில் நம்மிடையே ஒரு வழக்கமிருந்தது, ஒரு பெண் பிறந்ததும் அவளோடு சேர்த்து ஒரு காளை மாட்டையும் வளர்ப்பார்கள், அது அடக்கப்படுவதற்காக வளர்க்கப்படும் இவளோ அடக்கப்பட்டே வளர்க்கப்படுவாள். அந்தப் பெண்ணுக்கு திருமண வயது வந்ததும் அந்த காளை மாட்டை அடக்குபவனுக்கே அந்த பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பார்கள்.

இன்று அந்த வழக்கம் நடைமுறையில் இல்லை. ஆனாலும் ஜல்லிக்கட்டு என்ற பெயரால் இன்னும் மாடுகள் எப்படி அடக்கப்பட்டு துன்புறுகிறதோ அதே போல் பெண் எனும் ஒரு உன்னதப் படைப்பு அடக்கப்பட்டு காயப்பட்டு இன்னும் நம்மிடையே தான் வாழ்கிறாள். அந்த மிருகங்களுக்கு கூட அவைகளை துன்புறுத்தாதீர்கள் என்று போரட ஒரு சிலர் இருக்க்றார்கள் ஆனால் இவளுக்கு இன்னும் கூட ஏனோ அடங்கிப் போவதும் அடிமையாய் இருப்பதும் பிறப்பின் காரணங்களாகவே கற்பிக்கப்படுகின்றன.

அந்த மாடுகள் கூட முட்டி மோதி அதை துன்புறுத்துபவரை காயப்படுத்தி அந்த போராட்டத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள திமிறிக் கொண்டு ஓடுகின்றன, ஆனால் பெண்ணே நீ மட்டும் ஏனடி இன்னும் உன்னை காயப்படுத்துபவரை பூக்களால் கூட அடிக்க ம‌றுக்கிறாய்?

ஆணும் பெண்ணும் இணைந்தாலன்றி உலகில் உயிர் என்ற ஒன்று வெறும் கற்பனையே, ஆனால் பிறந்தது முதலே அவளை ஆணுக்காக மட்டும் பிறந்த ஒரு பொருளாக பார்ப்பது சமூகம் என்ற போலி மருத்துவர் நமக்கு மாட்டி விட்ட ஓட்டைக் கண்ணாடியின் உபயம். அதை கழற்றி எறிந்து விட்டுப் பார்க்க அவளும் இன்று மறந்தே விட்டாள். அவள் என்ன செய்வாள், அப்படி பார்க்க வேண்டும் என்ற நினைப்பு கூட வராத அளவுக்கு அவளுக்கு தான் இன்னும் ஆறாத எத்தனை காயங்கள்.

தேநீர்க் கோப்பை இன்னும் என்னோடு தனியாகவே உள்ளது மேலும் பேசுவோம்......

Wednesday, January 28, 2009

பெண் என்னும் உன்னதம்

சில நேரங்களில் தனிமையில் தேனீர்க் கோப்பையோடு பொழுதைக் கழிக்கையில் தான் வாழ்க்கையில் நாம் மறந்த பக்கங்கள் கண் முன் நிழலாடும், பொதுவாகவே இந்த பக்கங்கள் சுயநலப் பக்கங்களாகவே விரிந்து மறைகின்றன அந்த‌ ஒவ்வொரு பக்கத்திலும் சுவாசித்துக் கொண்டிருக்கும் சில எழுத்துக்கள் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. கவிதையாகவே இருந்தாலும் கசக்கிப் போட்டால் அது வெரும் குப்பைதான் அப்படி ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் இருக்கும் குப்பைகளுக்குள் கவிதையாய் காணாமல் போன 'பெண்' என்ற அந்த உன்னதத்திற்கு இது என்னால் முடிந்த‌ ஒரு காணிக்கை.

தொடரும்...