Thursday, January 12, 2012

விதைகளின் வரலாறு - 3

தீபாவளியன்று விடைபெறுவதற்கு முன்பே ஜூட் அண்ணன் ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் அவரவர்க்கான பயணச்சீட்டை கொடுத்து முடித்திருப்பார்.அப்போது மெதுவாய் யாராவது ஆரம்பிப்பார்கள் "ஏய் என்னப்பா ஜூட், எங்களுக்கு மட்டும் சீட் இவ்வளவு தள்ளி போட்ருக்கீங்க, உங்க எல்லாருக்கும் 30 ல வருது எங்களுக்கு மட்டும் 50 கிட்ட போட்ருக்கீங்க", நானும் ஜூட் அண்ணாவும் ஏதோ புரிந்தது போல ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம், அதற்குள் "எங்களுக்கும் தள்ளிதான் இருக்கு போலயே, என்ன வேலை செய்தான் இந்த ரயில்வே டிபார்ட்மெண்ட், எல்லாத்துக்கும் ஒண்ணா போட்டா என்னம்மா?" இது வெள்ளையம்மா சித்தி. "ஒரு லோயர் பெர்த் கூட இல்ல இது பத்தி நாம‌ ரயில்வே மினிஸ்டருக்குக் கண்டிப்பா கம்ப்ளெய்ண்ட் லெட்டர் அனுப்பனும்" இது அனுகுட்டி (எ) அனுராதா அக்கா. "எங்க போட்டா என்ன, எலலாரும் 6 சீட்ல தான் உட்காரப் போறோம், கடைசியா தூங்கும் போது தானா பெர்த்துக்கு போகணும்" என்று ஜூட் அண்ணாவும் நானும் சமாளித்துக் கொண்டிருப்போம்.

ஆனால் எனக்கும் ஜூட் அண்ணாவுக்கும் மட்டுமே தெரியும் அந்தப் பயணச்சீட்டுகளை வாங்குவதற்கு நாங்கள் பட்ட பாடு எங்கள் புன்னகையின் இழைகளெல்லாம் நிரம்பியிருக்கும் அந்த அனுபங்களால். ஒரு நபருக்கு ஒரு முன்பதிவுப் படிவம்தான், அதில் அதிகபட்சம்  6 பெயர் எழுதலாம். பொதுவாகவே 8 மணிக்குத் துவங்கி அடுத்த 10-20 நொடிகளில் மொத்த ரயிலும் முன்பதிவாகி காத்திருப்போர் பட்டியல் வந்து விடும். இதற்காக காலை 5 மணியிலிருந்தே வரிசை துவங்கி விடும். 8 மணிக்கு முன்பதிவு துவங்குவதற்கு முன் வரிசையில் 100க்கும் அதிகாமானோர் நின்று கொண்டிருப்பார்கள். இத்தனையும் கடந்து அந்த 25 பேருக்கும் முன்பதிவு செய்வதற்கும் ஒரு வழி வைத்திருப்பார் அண்ணன்.

ஜூட் அண்ணனோடு பணி புரியும் லோகு என்பவர் ரயில் நிலையம் அருகிலேயே குடியிருந்தார். அவர் காலை 6 மணிக்கே சென்று வரிசையில் நின்றுகொள்வார், அங்கிருந்து கூட்டம் எப்படியிருக்கிறதென்று தகவல் வந்துகொண்டே இருக்கும். பின்பு நானும் ஜூட் அண்ணாவும் அவரோடு வரிசையில் இணைந்து கொள்வோம். வரிசை மெதுவாய் நகர நகர எங்கள் மூவரின் கண்களும் கவுண்டர் மேல் உள்ள போர்டில் தான் இருக்கும். எங்கள் ரயிலில் யாரவது முன்பதிவு செய்தால் அதற்கான மீதியிருக்கும் பயணச்சீட்டுகளின் விவரம் அதில் பளிச்சிடும்,

நாங்கள் சென்றடையும் வரை ஏதாவது 50-60 ஆவ‌து மிஞ்சிவிட்டால் நல்லதென்று எங்களுக்குள் பேசியபடியே நகர்ந்து கொண்டிருப்போம் .எங்கள் வாய்ப்பு வந்ததும் மூவரும் அடுத்தடுத்த கவுண்டரைப் பிடித்துக் கொள்வோம். முதல் சீட்டை ஜூட் அண்ணன் முன்பதிவு செய்யும் போதே எங்கள் நிலையை விளக்கிவிடுவார். அந்த பயணச்சீட்டின் கோச் எண் தெரிந்ததும் நான் அதே கோச்சில் போடுமாறு வேண்டுகோள் வைப்பேன், அதே போல லோகுவும் அவருடைய கவுண்டரில் சொல்வார். சில சமயம் கவுண்டரில் உள்ளவர்கள் எங்களைப் புரிந்து கொள்வார்கள் பல சமயம் வாக்குவாதம் தான். ஒருவழியாக எல்லாம் முடிந்து லோகு கிளம்பிவிடுவார், நானும் அண்ணனும் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு முன்னால் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்ததும் பயணச்சீட்டுகளை சரிபார்க்கத்துவங்குவோம். "எல்லாம் இப்டி பிச்சிபிச்சி போட்றுக்கானுகளே, இதுக்கு பதில் சொல்லி  முடியாதே" என்பார் அண்ணன், அப்போதிருந்தே தயாராகத் துவங்கிடுவோம் நானும் அண்ணனும் நாங்கள் சந்திக்க‌ வேண்டிய கேள்விகளுக்காக.

ஒவ்வொரு முறையும் பயணச்சீட்டோடு சேர்த்து புன்னகையும் ஏதாவது ஒரு அனுபத்தையும் சுமந்தபடியே வெளியேறுவோம். அப்படி ஒரு மாறுபட்ட அனுபவம் 2010ல் எங்களுக்குக் கிடைத்தது

2010ம் ஆண்டு பொங்கலுக்கு ஊருக்குச் செல்வதற்கு இதேபோல் முன்பதிவை முடித்துவிட்டோம், திரும்பி சென்னை வருவதற்கான முன்பதிவு தினம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்று சர்ச்சுக்குப் போய்விட்டு திரும்புகையில் லதா அக்காவையும், மிஷலையும் அழைத்து வருவதாக சொல்லியிருந்தார் அண்ணன், அதனால் அன்று லோகு வரவில்லை நான் சென்று வரிசையில் காத்துக்கொண்டிருந்தேன். அன்று கூட்டம் வழக்கத்தை விட ஏராளமாய் இருந்தது. சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரோடும் வந்து அண்ணனும் என்னோடு சேர்ந்து கொண்டார்.

"ஏன் டாடி எப்பவுமே இப்படிதான் இருக்குமா?" என்று அக்கா கேட்க, "இல்ல மம்மி இன்னிக்கு தீபாவளி தட்கலும் ஓபன் ஆகுது அதான் இப்டி" என்றார் ஜூட் அண்ணன். கணவன் மனைவியென்றாலும் ஜூட் அண்ணனும், லதா அக்காவும் ஒருவைரையொருவர் டாடி, மம்மியென்றே அழைத்துக்கொள்வார்கள் அவர்களது மகள்தான் மிஷல். 8 மணி ஆனதும் நீண்ட வரிசை மெதுமெதுவாய் சுருங்கத் துவங்கியது. சுமாராய் 8:30 இருக்கும் நாங்கள் கவுண்டரை நெருங்கும் போது.

அண்ணன் மிஷலுக்கும், லதா அக்கவுக்கும் என்ன செய்ய வேண்டுமென்று 100 வது முறையாக விளக்கிகொண்டிருந்தார், லதா அக்காவும் சளைக்காமல் "இந்த கோச்ல போடுங்கனு சொன்னா போதும்ல டாடி" என்று 100வது முறையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் முறையும் வந்தது, வழக்கம்போல ஜூட் அண்ணன் கோச் எண்ணைக் கேட்டுச் சொன்னதும் நான், லதா அக்கா, மிஷல் மூவரும் அவரவர் கவுண்டரில் அதே கோச்சில் போடும்படி சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

திடீரென்று ஒரு குரல் "மேடம் நீங்க பண்றது ஃபோர்ஜரி" என்று எனக்கு அருகாமையில் கேட்டது. அந்தக் குரலை எதிர்கொண்டபடி கவுண்டருக்கு வெளியே ஆடு திருடி மாட்டிக்கொண்டது போல விழித்துக்கொண்டிருந்தது லதா அக்காவே தான்....

Wednesday, January 11, 2012

விதைகளின் வரலாறு - 2

பொங்கல் தேதி இன்னதென்று தெரியும் வரை இருப்பு கொள்ளாது எங்களுக்கு, கடைசியாய் பஞ்சாங்கம் பார்த்து சரியான தேதியை தாத்தா உறுதிப்படுத்தும் வரை தொடரும் அந்தப் பரபரப்பு. தேதி முடிவானதுமே ஜூட் அண்ணன் அடுத்த வேலையை சத்தமில்லாமல் துவங்கிவிடுவார்.

அடுத்து நடக்கும் எல்லா சின்னச் சின்ன சந்திப்புகளிலும் இது குறித்தே பேச்சாய் இருக்கும். அக்டோபர் மாதம் முன்பதிவுக்கான தேதியென்றாலும் அதற்கு ஓரிரு மாதங்கள் முன்னரே ரயில் நிலையம் சென்று முன்பதிவுக்கான படிவங்களை மொத்தமாய்க் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்வார். மொத்தம் 25 பேர் சென்னையிலிருந்து பயணமாவோம், அத்தனை பேரின் பெயர், வயது என்று எல்லாம் வெவ்வேறு கையெழுத்துகளில், வெவ்வேறு பேனாக்கள் கொண்டு நிரப்பப்பட்டு தயாராயிருக்கும் அக்டோபரை எதிர்பார்த்து.

இந்த 25ல் மொத்தம் 8 குடும்பங்கள் போக சென்னையில் வேலை செய்யும், படிக்கும் என்போன்ற உதிரிகளும் அடக்கம். சென்னையில் இருக்கும் நாங்கள் அனைவரும் தீபாவளிக்கு பத்து (எ) பத்மாவதி சித்தியின் வீட்டில் கூடிவிடுவோம். வெறும் நினைவுகளாலேயும், வெடிச் சிரிப்புகளாலேயும் நிரம்பி இருக்கும் எங்கள் எல்லா தீபாவளியுமே.

பத்து சித்தி ரயில்வே மருத்துவமனையில் மேட்ரனாக இருக்கிறார், அயனாவரம் ரயில்வே குவார்ட்டர்ஸில் தான் சித்தியின் வீடு. பழைய ஓட்டு வீடுதானென்றாலும் கொஞ்சம் பெரிய வீடு, சாலைக்கும் வீட்டுக்கும் நடுவே கொஞ்சம் காலியிடம், அதில் அங்கங்கே மரங்களும் செடிகளுமென்று ஆர்ப்பாட்டமின்றி அழகாய் இருக்கும், சாலையின் இருபுறமும் மரங்கள் கிளை பரப்பி நிற்க, வருடம் முழுவதும் பகலில் வெயில் மட்டுமே உலாவிக்கொண்டிருக்கும் சாலையும், வெறும் பறவைகளின் சத்தமும். ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் இலைகளின் இசையுமாய் நிறைந்திருந்த அந்த இடம் அன்றொரு நாள் மட்டும் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று எங்களை வேடிக்கைப் பார்க்கத் துவங்கி விடும்.

ஒரு நாற்காலியில் ரெண்டு மூன்று பேர், ஓரமாய்க் கிடக்கும் மரப்பெட்டியின் மேல் கொஞ்சம், உணவருந்தும் மேசைக்கு மேல், உணவருந்தும் மேசைக்குக் கீழ், தரையில் படுத்தபடி, சுவரில் சாய்ந்து நின்றபடி, இண்டு இடுக்கு சந்து பொந்து என்று எல்லோருமே ஒரே அறைக்குள் எங்களை நாங்களே திணித்துக் கொள்வோம். வெயில் தாழத்தாழ அங்கிருந்து மெதுவாய் நகர்ந்து மாலையில் வீட்டுக்கு வெளியே இருக்கும் காலியிடத்தில் கூடிப் பேசியபடியேயிருப்போம்.

இரவு அவரவர் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்ததும் "சரி அப்ப நாங்க போய்ட்டு வாரோம்" என்று சாலையில் நின்றபடியே தொடர்ந்து கொண்டிருக்கும் பேச்சு மேலும் சில மணி நேரங்களுக்கு, "நாள் பூராம் பேசுனது போதாதாக்கும், ரோட்ல வந்து நின்னும்  பேச அப்டி என்னதான் வச்சிருக்கீக‌" என்று ஏதாவது ஒரு சித்தப்பா சொல்ல "விடுங்க அண்ணாச்சி அக்கா தங்கச்சிக எல்லாம் ஒண்ணா சேர்ந்தா அவுகளுக்கு நேரம் போறதே தெரியாது, எவ்வளவு சந்தோசம் பாருங்க அவங்க மொகத்துல" இது திருமலைச்சாமி சித்தப்பா. அப்போதும் அந்த சாலையின் நிசப்தங்களை கிழித்துக் கொண்டிருக்கும் எங்கள் சிரிப்பை இப்போது வேடிக்கை பார்க்க வந்து சேர்ந்திருக்கும் இரவு...

Tuesday, January 10, 2012

விதைகளின் வரலாறு

ஏதோ தான் மட்டுமே இவ்வுலகை ஆள்வதைப் போல தன் கிளைகளை எல்லா திசைகளிலும் நீட்டி நிமிர்த்திக் கொண்டு ஒரு மௌனியைப் போல நின்று கொண்டிருக்கும் மரத்தைப் பார்க்கையிலெல்லாம் சட்டெனெத் தோன்றும் யார் விதைத்திருப்பார் இந்த மரத்துக்கான விதையையென்று. அப்படி ஒரு விதையைத் தேடி அலையும் சிறு முயற்சி இது

மே மாதம் ஏதோ ஒரு நாள் அன்று அதிகாலையிலேயே அலறியது என் கைப்பேசி. என் ஆழ்ந்த நித்திரையை அன்று கலைத்தது ஜூட் அண்ணன் தான். அது என்னவோ அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தால் மட்டும் அது எனக்கு உற்சாகத்தைத் தவிர்த்து வேறேதும் கொடுப்பதேயில்லை, ஏன்னா அண்ணன் ஆள் அப்படி. கைப்பேசி காதுக்குச் சென்றதுமே "ஏய் தம்பி ஒண்ணுமில்ல பொங்கல் 14th வருதா இல்ல 15th வருதா அடுத்த வருசம்", "எப்ப வந்தா என்னண்ணா ஒரு வாரம் முழுசா போட்றலாம் லீவு" இது நான். "அதுக்கில்ல தம்பி ஒரு calendar ல 14 ந்னு போட்ருக்கு இன்னொன்னுல 15 ந்னு போட்ருக்கு, நீ ஊர்ல கேட்டு சொல்றியா, அப்பதான் டிக்கெட் என்னிக்கு open ஆகுதுன்னு பாக்க சரியா இருக்கும்"

இப்படித்தான் துவங்கும் எங்கள் பொங்கல் ஒவ்வொரு வருடமும். பொங்கல் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் எங்களைப் பொறுத்தவரை எங்கள் வருடம் முழுதுமே வரப்போகும் அந்த நாளுக்காகத்தான் ஏங்கிக் கிடப்போம், நானும் ஜூட் அண்ணாவும் மட்டுமல்ல எங்கள் மொத்த குடும்பமுமே அப்படித்தான். எங்க தாத்தாவுக்கு மொத்தம் பத்து பிள்ளைகள், மூன்று ஆண்களும், ஏழு பெண்களும். அவர்களின் பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் என்று நான்காவது தலைமுறையைத் தொட்டாயிற்று, கிட்டத்தட்ட 100 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் குடும்பத்தின் மக்கள்தொகை.

பொங்கல் நடக்கும் அந்த ஒரு வாரமும் எங்கள் குடும்பத்தின் முகவரி ஒன்றே "திறுக்குறுங்குடி". திருநெல்வேலி தாண்டி வள்ளியூருக்கு அருகே எங்களுக்காக எங்கள் தாத்தாவும் ஆச்சியும் உருவாக்கிக் கொடுத்திருக்கும் சொர்க்கம். இதற்கு முன் சொர்க்கத்திற்குப் போய் வந்து பழக்கமில்லைதான் எனக்கு, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்த ஒரு வாரம் நாங்கள் வாழும் அந்த நொடிகளுக்காக சொர்க்கம் கூட ஏங்கிப் போகும்.

தேடல் தொடரும்...