Monday, February 15, 2010

உறைந்து போன நொடிகள்: புகைப்படங்கள் காட்டும் வெளிச்சம் ...

ஒரு புகைப்படத்தில் நாம் எதைச் சொல்ல வருகிறோமோ அதற்கு எந்த எல்லையுமே இல்லை. ஆனால் வசதி கருதி ஒரு எல்லை தேவைப்படுகிறது. அதுவே Frame எனப்படும் சட்டகம். நம் கண்கள் பார்க்கும் ஒரு நொடியை நிரந்தரமாய்ப் பதிவு செய்ய நமக்கு ஒதுக்கப்பட்ட இடம் தான் சட்டகம். நடிகனுக்கு ஒரு மேடை போலத்தான் ஒரு புகைப்படத்துக்கு சட்டகம். எவ்வளவு திறமையிருந்தாலும் ஒரு நடிகன் திரையில் அதை எவ்வளவு வெளிக்காட்டுகிறானோ அவ்வளவே அதைப் பார்ப்பவர்களைச் சென்றடையும். புகைப்படத்தின் இந்த நான்கு கோடுகள் தான் கலைஞனுக்கு எல்லைகள்; அதற்குள் அவன் ஒளியைக் கொண்டு தீட்டப் போகிற ஓவியங்களுக்கோ எல்லை என்று ஏதுமில்லை
புகைப்படங்களைப் பொறுத்தவரை மிகவும் அத்தியாவசியமானது Composition எனும் ஆக்கஅமைவு. Composition என்றால் ஒரு புகைப்படக் கலைஞன் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள அவனுக்குக் கொடுக்கப்பட்ட இடத்திற்குள் எதை எதை எங்கெங்கு வைக்க வேண்டும் என்பதுதான். ஒரு வீட்டுக்குள் ஒரு பொருளை இங்கு வைத்தால் அழகாய் இருக்கும் என்பது போல, ஒரு புகைப்படத்தை உருவாக்குகையிலும் சில சின்ன கூறுகளின் இடமும் திசையும் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும்



இந்தப் புகைப்படத்தைப் பொறுத்தமட்டில் ஒரு புகைப்படத்தை அழகாக்கும் பல விதிகள் இயல்பாகவே அமைந்து விட்டன. தன்னை மறந்து சிரிக்கும் ஒரு குழந்தை, கண்கள் மூடி உலகை மறந்து வெகு இயல்பாய் இருக்கும் ஒரு நொடி பதிவு செய்யப்பட்டுள்ளது. சுருண்ட தலைமுடி, அதில் ஒற்றைப் பூ, அடுத்த நொடி என்று காத்திருக்க ஏதுமில்லை என்பது போல ஒரு ஆனந்தமான சிரிப்பு, பெரிதும் நெருடலில்லாத பிண்ணனி.

புகைப்படத்தில் இருந்து உங்கள் கண்களை அங்கிங்கு அகலவிடாமல் கட்டிப் போடுவதை Processing என்று சொல்லப்படும் பின்தயாரிப்பு தான் சாத்தியமாக்குகிறது. எத்தனை தான் அழகாக இருந்தாலும் வெளியே போகும் போது தலை சீவுவோமே அது மாதிரி ஒரு புகைப்படத்துக்கு பின்தயாரிப்பு. பின்தயாரிப்புக்கு பலவகை மென்பொருட்கள் பயன்படுகின்றன. ஒரு புகைப்படத்தை உருவாக்குகையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு இருக்கும் களம் தான் பின்தயாரிப்பு. ஒரு படத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் முதல் புகைப்படத்தையே முற்றிலும் மாற்றுவது வரை பின்தயாரிப்பில் ஏகப்பட்ட வித்தைகள் செய்யலாம். எல்லாப் புகைப்படங்களுக்குமே பின்தயாரிப்பு அவசியமற்றது. நடிகைக்கான ஒப்பனை போல சில படங்களுக்கு processing மிகவும் தேவைப்படும்; மற்றவைகள் பிறந்த மழலை போல இயல்பாகவே அழகாய் இருக்கும். அவற்றை அப்படியே விட்டு விடுவது நல்லது. அதுபோல‌சரியாக செய்யப்பட்டால் புகைப்படங்கள் கண்டிப்பாக இன்னும் மெருகேறும்.
இந்தப் படத்தில் கையாளப்பட்டிருக்கும் பின்தயாரிப்பும் அப்படிதான். குழந்தையின் மென்மையை உணர்த்தும் மிருதுவான உணர்வை அளிக்கிறது இப்படம். அதீதமான நிறங்கள் ஏதும் இல்லாமல் சற்றே கறுப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிப்பதால் நம் கவனம் கலையாமல் அந்தக் குழந்தையின் புன்னகையிலேயே ஊன்றி விடுகிறது. இப்படி சாதகமாக பல இருந்தாலும் ஒரே ஒரு தவறு இந்தப் படத்தின் அழகை முற்றிலும் குறைத்து விடுகிறது.
பொதுவாகவே மனிதர்களைப் படம் பிடிக்கையில் கழுத்து, முழங்கால், இடுப்பு, முழங்கை போன்ற இணைவுப் பகுதிகளில் வெட்டப்பட்டு அரைகுறையாக அமைத்தால் அப்படத்தைப் பார்க்கையில் அது ஒரு நெருடலாகவே இருக்கும். இந்தப் புகைப்படத்தில் அந்தக் குழந்தையின் தலை வரை மட்டுமே தெரிவது ஒரு முக்கிய குறை. முகம் துருத்தித் தெரிவது போல் தோன்றுகிறது. அதற்கு பதில் சற்று கீழே இற‌க்கியோ அல்லது ஏற்றியோ எடுத்திருந்தால் இது போல துருத்திக் கொண்டு நிற்காமல் இந்த புகைப்படமே முழுமை அடையும்



உதாரணத்திற்கு இந்த இரண்டாவது படத்தைப் பாருங்கள். எந்தப் பின்தயாரிப்பும் அல்லாமல், மிக எளிமையாக அமைந்துள்ளது. முந்தைய படத்தில் இருந்த அந்தப் புன்னகையை விட இதற்கு வசீகரம் சற்று குறைவு தான். ஆனால் சற்று கீழே இறக்கி எடுக்கப்பட்டிருப்பதால் முழுமை பெற்றுள்ளது.

பொதுவாகவே சிலந்திகளைப் பார்த்தால் நம்மில் பலர் பயந்து ஓடி விடுவோம், அதனால் தானோ என்னவோ அதன் உடலில் இத்தனை நிறங்களை நாம் பார்த்தே இருக்க மாட்டோம்



இந்தப் புகைப்படத்தில் பெரிய அளவில் பின்தயாரிப்பு ஏதும் செய்யப்படவில்லை. இயற்கை தன்னை அழகாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதேயில்லை. அதனால் இது போன்ற படங்களுக்கு பெரிய அளவில் பின்தயாரிப்பு செய்யாமல் இருப்பதே அழகு. பச்சைப் பசேலென்று அட்டகாசமாய் அமைந்து விட்ட பிண்ணனி, புகைப்படம் முழுவதும் நிரம்பி இருக்கும் அந்த சிலந்தி வலை, அது பின்னப்பட்டிருக்கும் நேர்த்தி, அது கொடுக்கும் texture எனப்படும் தொடுபரப்பு உணர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. Texture எனும் தொடுபரப்பு பார்வைக்கு ஒரே மாதிரி இல்லாமல் ஏனோ தானோ என்று தெளிவற்று இருந்தாலும் இத்தன்மை ஒரு புகைப்படத்திற்கு ஒரு தனி அழகைக் கொடுக்கும். உதாரணமாக, கோயில் கோபுரங்களை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் அவற்றில் இருக்கும் சிற்பங்கள் தெளிவாய் தெரியாது. ஆனால் இச்சிற்பங்கள் தாம் அந்த கோபுரங்களை அழகாய்க் காட்டும். ஒரு குழந்தையின் கிறுக்கல் போல texture-இன் அழகு புரிதற்கு அப்பாற்பட்டது. அது சரியாகப் பயன்படுத்தப்பட்டால் புகைப்படத்தையே சற்று தூக்கி நிறுத்தும். இங்கும் அப்படியே சிலந்திவலை உருவாக்கி இருக்கும் texture அந்த சிலந்தியை சற்று முன்னிறுத்திக் காட்டுகிறது. இதை விட அந்த சிலந்தியின் உடலில் இருக்கும் நிறங்கள் முக்கியம். பிண்ணனியிலிருந்து சிலந்தியை பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டுகின்றன இந்த நிறங்கள். ஆனால் இதிலும் ஒரு சிறு குறை வந்து இந்தப் புகைப்படத்தின் அழகை கெடுக்கத்தான் செய்கிறது.
ஒரு புகைப்படத்தில் உங்களுக்கு தேவைப்படும் பொருட்களோடு சேர்ந்து சில தேவையில்லாதவைகளும் உள்ளே வந்து பின்னால் அமர்ந்து கொள்ளும். பல சமயங்களில் நம்மால் இந்த நுழைவை தவிர்க்க முடியாது. ஆனால் பல சமயங்களில் அது புகைப்படத்தின் அழகை சற்று பாதிக்கவே செய்யும். இந்தப் புகைப்படத்தில் சிலந்திக்குப் பின்னால் ஒரு மெல்லிய பச்சை நிறம் படர்ந்து அந்த சிலந்தியை முன்னிறுத்திக் காட்டுவதை முன்னரே பார்த்தோம் ஆனால் ஒரு மூலையில் மட்டும் சில வெள்ளைப் புள்ளிகள் நம் கண்கள் சிலந்தியை மட்டுமே பார்க்க விடாமல் செய்து கொண்டிருக்கின்றன. புகைப்படத்தில் இருக்கும் மற்ற நிறங்களிலிருந்து இந்த வெள்ளை முற்றிலும் வேறுபட்டு இருப்பதால் நம்மால் சிலந்தியில் அதிக கவனம் செலுத்த முடியாமல் கண்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருக்கும். இந்த புள்ளிகளை பின்தயாரிப்பின் போது வெட்டி விடலாம் என்றாலும், ஒருவேளை இவை சிலந்திக்கு நேர் பின்னால் வந்துவிட்டால் பெரும் சிக்கல் தான். அதற்கு பதில் அந்தப் புகைப்படம் உருவாகையிலேயே வெண்புள்ளிளை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்



உதாரணத்திற்கு இந்த நான்காவது படம். நடந்து முடிந்த ஒரு மழைக்காலத்தின் வரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கும் இரு இலை. பெரிதும் ஆர்ப்பட்டமில்லாத ஒரு புகைப்படம். சில இலைகள், அவைகளைத் தாங்கி நிற்கும் ஒரு கிளை, அதில் ஒரு இலை தாங்கிப் பிடித்திருக்கும் ஒரு துளி நீர். பிண்ணனியில் ஏதாவது கவனம் கலைக்கும் அம்சங்கள் இருந்தால் இந்தப் புகைப்படம் பொருளற்றுப் போயிருக்கும். ஆனால் சிறு களங்கம் கூட இல்லாத நீல நிறம் கொண்ட அந்தப் பின்புலம்தான் இந்தப் புகைப்படத்தின் பலம். இந்தப் புகைப்படமே அந்தத் துளிக்காத்தான் ஆனாலும் அதை நமக்குத் தெளிவாக்கிக் கொடுப்பது எங்கோ பின்புலத்தில் இருக்கும் அந்த சுவர் தான்.

 http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2527

No comments: