Monday, March 1, 2010

முகங்களற்ற உணர்வுகளின் முகவரிகள்

மனிதனின் உள்ளுணர்வுகளை ஊடுருவிப் படம் பிடிக்க அவசியமில்லாமல் செய்துவிட்ட ஒரு அற்புதம், மனிதனின் முகம். மனதின் எண்ண ஓட்டங்களை வெளி உலகிற்காக சுமந்து கொண்டிருக்கும் சுமைதாங்கிகள்தான் முகங்கள். இயல்பான முகங்கள் எப்படி மனிதனின் உணர்வுகளை வெளிக்கொணரும் என்பதை நாம் அறிவோம், ஆனால் ஒரு மனிதனின் முகத்தை சட்டகத்துள் கொண்டு வராமல் உணர்வுகளைப் படம் பிடிப்பதும் ஒரு கலைதான்.
நமது திரைப்படங்களில் ஒரு காட்சி உண்டு, ஒரு ஆணும் பெண்ணும் விரும்புவார்கள், ஆண் தன் விருப்பத்தை சொன்னதும், பெண் தன் கால் பெருவிரலால் தரையில் கோலம் போடுவாள், அவளும் அவனை விரும்புகிறாள் என்பதை வெறும் கால் பாதங்களை மட்டுமே வைத்து ஒரு பார்வையாளனுக்கு உணர்த்தி விடும் இந்தக் காட்சி.
இது போல பல உணர்வுகளை வெறும் கைகள், கால்கள் என்று ஒரு மனித உடலின் சில பாகங்களை மட்டுமே சட்டகத்திற்குள் கொண்டு வந்து அந்த மனிதனின் உணர்வுகளை அந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவர்க்கு உணர்த்த முடியும். சரியான ஆக்க அமைவு (composition) இது போன்ற புகைப்படங்களுக்கு அவசியம். புகைப்படங்களில் கோடுகளோ அல்லது வளைவுகளோ (lines and curves) இருக்கையில் அவை சட்டகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து துவங்குவது போல் படம் பிடித்தால், அவை பார்வையாளரின் கண்களை அந்தக் கோடு துவங்கும் புள்ளியில் இருந்து புகைப்படத்தினுள் வழி நடத்திச் செல்லும். இதை leading lines என்று அழைப்பார்கள்.


இந்த முதல் படத்தைப் பார்ப்போம், எதையோ எதிர்பார்த்து நீளும் ஒரு கரம், தன்னிடம் ஏதோ இல்லை, உங்களால் இயன்றதைக் கொடுங்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல இயலாமல் ஒரு செய்கையின் மூலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது, என் தேவைகள் என்னிடம் இல்லாமல் போனதற்கு என் முதுமை கூட ஒரு காரணமாய் இருக்கலாம் என்பதை உணர்த்துவது போல அந்தக் கரங்களில் தெரியும் சுருக்கங்கள். சற்றே இருள் நிரம்பிய என் உலகிற்குள் நான் ஒளியை யாசிக்கிறேன் என்று கேட்பது போல, சற்று இருண்ட மூலையில் இருந்து துவங்கினாலும் எங்கிருந்தோ வரும் ஒளிக்கீற்றில் நனைந்து கொண்டிருக்கும் அந்த உள்ளங்கை. புகைப்படத்தில் இருக்கும் உணர்வுகளை மேலும் ஆழமாய் வெளிக்கொணரும் பின் தயாரிப்பு.
புகைப்படத்தில் அங்கங்கே சில நெருடல்களும் இருக்கவே செய்கின்றன, ஆனால் அவையும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலை உணர்த்துவதால் அவை கூட ஒரு விதத்தில் இந்தப் புகைப்படத்தில் உள்ள‌உணர்வுகளை ஆழமாய் சித்தரிக்க‌வே உதவுகிறது. இங்கே அந்தக் கை துவங்கும் இடம் சட்டகத்தின் ஒரு மூலையில் உள்ளதால் அங்கிருந்து அந்தக் கோடு நம் கண்களை வழி நடத்தி உள்ளங்கையில் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்தப் புகைப்படத்தை உருவாக்கியவர் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை நாம் பார்ப்பது இந்தப் புகைப்படத்தின் ஆக்க அமைவு சரியாய் அமைந்ததால்தான்.



 
இரண்டாவது படம் ஒரு மழலையின் தீண்டலை உணர்த்துகிறது, பிஞ்சு விரல்கள் அந்த சிவந்த பாதங்களோடு விளையாடுகையில் அந்த நொடிகளின் மென்மையையும் உன்னதத்தையும் முகமில்லாமல் வெறும் ஒரு கையும் காலும் மட்டுமே சட்டகத்திற்குள் வைத்து உணர்த்துகிறது இந்தப் புகைப்படம். இங்கும் ஆக்க அமைவு சரியாக கையாளப்பட்டிருப்பதுதான் இந்தப் புகைப்படத்தின் பலம். சட்டகத்தின் முனையில் இருந்து நீளும் அந்தக் கைகள் அத‌ற்கே உரிய மென்மையோடு நம்மை அந்தப் பாதங்களுக்கு வழி நடத்திச் செல்கின்றது, அந்த விரல்களும் பாதங்களும் மோதும் புள்ளியில் நம் கண்கள் ஊன்றிவிடுவதற்கு மற்றொரு காரணம் இந்தப் புகைப்படத்தின் பின்னணி, அதிக நெருடலில்லாமல் இந்தப் படம் சொல்லவிரும்பும் உணர்வை எந்த விதத்திலும் குலைத்துவிடாமல் இருப்பதும் பின்னணியாலும்தான். இவை எல்லாம் சேர்ந்து அமைந்ததால்தான் இந்தப் புகைப்படம் பார்க்கும் நம்மையும் அந்த உணர்வுகளுக்குள் இழுத்துச் செல்கிறது.

மூன்றாவது படமும் கூட வெறும் கைகளை மட்டுமே வைத்து ஒரு உணர்வைக் கதை போல் பேசுகிறது. வயது முதிர்ந்த ஒருவர் தன் வாழ்க்கையில் சொல்லாமல் விட்டுவிட்ட நன்றிகளைச் சொல்வது போல ஒரு உணர்வைத் தருகிறது இந்தப் படம். சுருக்கம் விழுந்த கைகள், இறுக்கமாய் அல்லாமல் சற்றே வலுவில்லாமல் குவிக்கப்பட்ட கரங்கள், பின்னணியில் இருக்கும் வேறு ஒருவரது கைகள். அதிக நெருடலில்லாத சட்டகம், மிக வலுவாய் அமைந்துவிட்ட பின்னணி இவைதான் இந்தப் படத்தின் பலம்.
புகைப்படத்தின் வலது கீழ் மூலையில் கைகள் துவங்கும் இடத்தில் சற்று உறுத்திக்கொண்டிருக்கிறது ஏதோ ஒரு பொருள். அது இந்தப் படத்தின் ஆக்க அமைவில் ஒரு குறைதான் என்றாலும், அதை நம் கண்கள் கடந்து கைகளுக்குச் சென்ற உடன் அங்கிருந்து நம் கண்களை வேறு ஏதும் ஈர்ப்பதில்லை. அந்தக் கரங்கள் எந்த உணர்வை வெளிக்காட்ட குவிந்ததோ அதை முகங்களின் உதவியில்லாமல் சற்றும் குறைவில்லாமல் பதிவு செய்துள்ளதே இந்தப் புகைப்படத்தின் பலம்






http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2575

Monday, February 22, 2010

சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்

மனித முகங்களை படம் பிடித்தலில் இருக்கும் ஆனந்தமே தனி தான். வீடுகளில் இன்னும் பழைய புகைப்படங்களை மாட்டி வைத்திருப்போம் பலரும். சொல்லிவைத்தாற் போல இந்தப் புகைப்படங்களில் இருக்கும் எல்லா முகங்களுமே நம்மையே வெறித்துப் பார்த்தபடி இருக்கும். வேறு எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் ஒரு இறுக்கமான புன்னகையுடன் நம் வீடுகளை அலங்கரிக்கும் இத்தகைய‌ புகைப்படங்கள் ஏராளம்.
மனித முகங்களைப் படம் பிடிக்கும் பொழுது முடிந்தவரை அவர்கள் இயல்பாய் இருக்கும் நொடியில் படம் பிடித்தால் அந்தப் படத்திற்க்கே ஒரு தனி அழகு வந்துவிடும். இப்படிப் பட்ட படங்களை Candid என்று அழைப்போம். Candid என்றால் கபடமில்லாத அல்லது நேர்மையான ஒரு நொடி என்று சொல்லலாம், அல்லது நாம் நாமாய் இருக்கும் தருணம். நம் வீட்டில் அமர்ந்து உணவருந்தும் போது எதைப் பற்றியும் கவலையின்றி சோற்றை கைகளால் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அதே ஒரு உயர்தர உணவகத்தில் அமர்ந்திருந்தால் தோசையைக் கூட கரண்டியால் சாப்பிடுவோம். முதல் வகை தான் Candid, எதைப் பற்றியும் கவலையின்றி நாம் நாமாய் இருக்கும் நொடி; இரண்டாவது வகை Posing . அதாவது பாவனை. நாம் ஒன்றும் குறைந்தவரில்லை என்று காட்டுவதற்காக நம் இயல்பை மீறி நாம் செய்யும் ஒரு செயல்.
ஒருவர் இயல்பாய் இருக்கையில் படம் பிடித்து அதை அவர்களிடம் காட்டும் பொழுது அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி "பாக்கும் போது எடுத்திருக்கலாம்ல" என்பதுதான். அப்படி எடுப்பதில் இருக்கும் ஒரே பின்னடைவு நம்மில் பலருக்கும் புகைப்படக் கருவியைப் பார்த்தபடியே இயல்பாய் இருப்பது முடியாது என்பது. நேருக்கு நேராய் அதைப் பார்த்தப்படியே மிகவும் செயற்கையான ஒரு புன்னகையையும் போர்த்திக் கொண்டு நின்று விடுவோம் தோசையைக் கரண்டியால் சாப்பிடுவது போல, சுருக்கமாய் சொன்னால், pose கொடுப்போம். வெகு சிலரால் மட்டுமே புகைப்படக்கருவியை பார்த்தபடியே இயல்பாய் இருக்க முடியும் அது ஒரு தனி கலை.

இப்படிப்பட்ட நேருக்கு நேராய் எடுக்கப்படும் புகைப்படங்கள் எவ்வளவு தான் அழகாய் இருந்தாலும் உயிரற்று இருப்பது போல இருக்கும். இந்த முதல் படத்தில் உள்ளவர் வலிகளின் சுமையை தன் தோலின் சுருக்கங்களில் அடக்கிக் கொண்டு தெருக்களின் அரவணைப்பில் வாழ்க்கையைத் தேடுபவர். காயம் சுமந்த நெற்றி, மனதின் காயங்களை ஆற்றமுடியாமல் தவிக்கும் தவிப்பை தலைமுடிக்கும் தாடிக்கும் இடையே ஒளிந்து கொள்ள‌விடாமல் போட்டு உடைக்கும் அந்த முகம், ஏக்கம் சுமந்த அந்தப் பார்வை -- இப்படி தொலைந்து போன ஒரு வாழ்வின் அடையாளமாய் ஒரு உருவம். பின் தயாரிப்பின் மூலம் இன்னும் ஆழமாய் வெளிக்கொணரப்பட்டுள்ளன இந்த உணர்வுகள்.
இந்தப் புகைப்படத்தில் பிண்ணனியும் ஒரு குறை தான்; ஆனால் இந்தப் படத்தின் வீரியத்தை வெகுவாகக் குறைத்து விடுவது நேருக்கும் நேராய் அவர் புகைப்படக் கருவியைப் பார்த்தபடி இருப்பதுதான். மனித முகத்தைப் படம் பிடிப்பதன் நோக்கமே நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும் மனித இயல்புகளை பதிவு செய்வதுதான். ஒருவேளை இந்த மனிதர் இயல்பாய் இருக்கையில் இவரைப் பதிவு செய்திருந்தால் இவர் சுமந்து கொண்டிருக்கும் வலிகளை இன்னும் ஆழமாக உணர்த்தி இருக்கக் கூடும்.
இந்த இரண்டாவது படத்தைப் பார்த்தால் இயல்பாய் ஒரு நொடியைப் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பது நமக்கே தெரிந்துவிடும்.

தெருவோரம் பூக்களை விற்கும் ஒரு பெண்; பெரும்பாலும் வியாபாரத்திலேயே கவனமாய் இருக்க வேண்டிய கட்டாயம், வெயிலோ மழையோ அன்றைய பூக்களை அன்றே விற்றாக வேண்டும். அன்று மிஞ்சிப் போவதெல்லாமே குப்பைக்குத்தான். இந்த சிந்தனைகளூடே நகர்ந்து கொண்டிருக்கும் நொடிகளில், அவளைக் கடந்து செல்லும் அந்தக் கால்களுக்குச் சொந்தமான மனிதரின் ஏதோ ஒரு செய்கையால் ஏதோ ஒரு நொடியில் தெறித்து விழுந்தது தான் இந்தப் புன்னகை; அடுத்த நொடியில் மறைந்து போகக் கூடிய‌ ஒரு அற்புதமான தருணம் அவர் இயல்பாய் இருக்கையில் வெகு இயல்பாய் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் இந்தப் புகைப்படத்தின் பலம். எப்பொழுது இந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலும் பார்ப்பவர் உதடுகளிலும் ஒரு இயல்பான புன்னகை தோன்றும். இதுபோல ஒரு உணர்வை வெகு எளிதாய் நமக்குள் ஏற்படுத்தும் திறன் தான் ஒரு புகைப்படத்தின் உயிர்.

இந்தப் படமும் அப்படித்தான்: நாம் அடிக்கடி விவாதிக்கும் பள்ளிக் குழந்தைகள் சுமக்கும் புத்தக மூட்டை. நாம் எவ்வளவு தான் வார்த்தைகளில் வடித்தாலும் அவர்கள் அந்தப் புத்தகப்பையை எவ்வளவு சிரமத்துடன் சுமக்கிறார்கள் என்பதை விளக்குவது கடினம். இந்தப் புகைப்படத்தில் அத்தகைய ஒரு நொடி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படத்திலும் பிண்ணனி ஒரு குறைதான். பின்னால் தெரியும் நிறங்கள் நம் கண்களை அந்த சிறுவனிடம் ஊன்றவிடாமல் செய்கிறது; ஆனாலும் இது போல ஒரு முற்றிலும் இயல்பான நொடியைப் பதிவு செய்கையில் நம் கவனம் முழுவதும் அந்த ஒரு நொடிக்காகவே காத்திருக்கும். அது நடந்தேறுகையில் பதிவு செய்யப்பட்டால் அந்தப் புகைப்படத்தின் அழகு அதிலிருக்கும் குறைகளையும் தாண்டி அதைத் தூக்கி நிறுத்தும். ஆம் அவ்வளவு வலிமையானவை மனித இயல்புகள்.
பொதுவாகவே நாம் யாரை புகைப்படம் எடுக்கிறோமோ அவர் மிகவும் இயல்பாய் இருக்கும் ஒரு நொடியை பதிவு செய்தால் அதன் அழகே தனிதான். அப்படிப்பட்ட புகைப்படங்களை பின்னாளில் புரட்டிப் பாருங்கள்: எட்டிப் பார்க்கும் ஒரு துளி கண்ணீரோ அல்லது உதடுகளில் சட்டென்று வந்து ஒட்டிக்கொள்ளும் புன்னகையோ இலவசம்.


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2549

Monday, February 15, 2010

உறைந்து போன நொடிகள்: புகைப்படங்கள் காட்டும் வெளிச்சம் ...

ஒரு புகைப்படத்தில் நாம் எதைச் சொல்ல வருகிறோமோ அதற்கு எந்த எல்லையுமே இல்லை. ஆனால் வசதி கருதி ஒரு எல்லை தேவைப்படுகிறது. அதுவே Frame எனப்படும் சட்டகம். நம் கண்கள் பார்க்கும் ஒரு நொடியை நிரந்தரமாய்ப் பதிவு செய்ய நமக்கு ஒதுக்கப்பட்ட இடம் தான் சட்டகம். நடிகனுக்கு ஒரு மேடை போலத்தான் ஒரு புகைப்படத்துக்கு சட்டகம். எவ்வளவு திறமையிருந்தாலும் ஒரு நடிகன் திரையில் அதை எவ்வளவு வெளிக்காட்டுகிறானோ அவ்வளவே அதைப் பார்ப்பவர்களைச் சென்றடையும். புகைப்படத்தின் இந்த நான்கு கோடுகள் தான் கலைஞனுக்கு எல்லைகள்; அதற்குள் அவன் ஒளியைக் கொண்டு தீட்டப் போகிற ஓவியங்களுக்கோ எல்லை என்று ஏதுமில்லை
புகைப்படங்களைப் பொறுத்தவரை மிகவும் அத்தியாவசியமானது Composition எனும் ஆக்கஅமைவு. Composition என்றால் ஒரு புகைப்படக் கலைஞன் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள அவனுக்குக் கொடுக்கப்பட்ட இடத்திற்குள் எதை எதை எங்கெங்கு வைக்க வேண்டும் என்பதுதான். ஒரு வீட்டுக்குள் ஒரு பொருளை இங்கு வைத்தால் அழகாய் இருக்கும் என்பது போல, ஒரு புகைப்படத்தை உருவாக்குகையிலும் சில சின்ன கூறுகளின் இடமும் திசையும் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும்



இந்தப் புகைப்படத்தைப் பொறுத்தமட்டில் ஒரு புகைப்படத்தை அழகாக்கும் பல விதிகள் இயல்பாகவே அமைந்து விட்டன. தன்னை மறந்து சிரிக்கும் ஒரு குழந்தை, கண்கள் மூடி உலகை மறந்து வெகு இயல்பாய் இருக்கும் ஒரு நொடி பதிவு செய்யப்பட்டுள்ளது. சுருண்ட தலைமுடி, அதில் ஒற்றைப் பூ, அடுத்த நொடி என்று காத்திருக்க ஏதுமில்லை என்பது போல ஒரு ஆனந்தமான சிரிப்பு, பெரிதும் நெருடலில்லாத பிண்ணனி.

புகைப்படத்தில் இருந்து உங்கள் கண்களை அங்கிங்கு அகலவிடாமல் கட்டிப் போடுவதை Processing என்று சொல்லப்படும் பின்தயாரிப்பு தான் சாத்தியமாக்குகிறது. எத்தனை தான் அழகாக இருந்தாலும் வெளியே போகும் போது தலை சீவுவோமே அது மாதிரி ஒரு புகைப்படத்துக்கு பின்தயாரிப்பு. பின்தயாரிப்புக்கு பலவகை மென்பொருட்கள் பயன்படுகின்றன. ஒரு புகைப்படத்தை உருவாக்குகையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு இருக்கும் களம் தான் பின்தயாரிப்பு. ஒரு படத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் முதல் புகைப்படத்தையே முற்றிலும் மாற்றுவது வரை பின்தயாரிப்பில் ஏகப்பட்ட வித்தைகள் செய்யலாம். எல்லாப் புகைப்படங்களுக்குமே பின்தயாரிப்பு அவசியமற்றது. நடிகைக்கான ஒப்பனை போல சில படங்களுக்கு processing மிகவும் தேவைப்படும்; மற்றவைகள் பிறந்த மழலை போல இயல்பாகவே அழகாய் இருக்கும். அவற்றை அப்படியே விட்டு விடுவது நல்லது. அதுபோல‌சரியாக செய்யப்பட்டால் புகைப்படங்கள் கண்டிப்பாக இன்னும் மெருகேறும்.
இந்தப் படத்தில் கையாளப்பட்டிருக்கும் பின்தயாரிப்பும் அப்படிதான். குழந்தையின் மென்மையை உணர்த்தும் மிருதுவான உணர்வை அளிக்கிறது இப்படம். அதீதமான நிறங்கள் ஏதும் இல்லாமல் சற்றே கறுப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிப்பதால் நம் கவனம் கலையாமல் அந்தக் குழந்தையின் புன்னகையிலேயே ஊன்றி விடுகிறது. இப்படி சாதகமாக பல இருந்தாலும் ஒரே ஒரு தவறு இந்தப் படத்தின் அழகை முற்றிலும் குறைத்து விடுகிறது.
பொதுவாகவே மனிதர்களைப் படம் பிடிக்கையில் கழுத்து, முழங்கால், இடுப்பு, முழங்கை போன்ற இணைவுப் பகுதிகளில் வெட்டப்பட்டு அரைகுறையாக அமைத்தால் அப்படத்தைப் பார்க்கையில் அது ஒரு நெருடலாகவே இருக்கும். இந்தப் புகைப்படத்தில் அந்தக் குழந்தையின் தலை வரை மட்டுமே தெரிவது ஒரு முக்கிய குறை. முகம் துருத்தித் தெரிவது போல் தோன்றுகிறது. அதற்கு பதில் சற்று கீழே இற‌க்கியோ அல்லது ஏற்றியோ எடுத்திருந்தால் இது போல துருத்திக் கொண்டு நிற்காமல் இந்த புகைப்படமே முழுமை அடையும்



உதாரணத்திற்கு இந்த இரண்டாவது படத்தைப் பாருங்கள். எந்தப் பின்தயாரிப்பும் அல்லாமல், மிக எளிமையாக அமைந்துள்ளது. முந்தைய படத்தில் இருந்த அந்தப் புன்னகையை விட இதற்கு வசீகரம் சற்று குறைவு தான். ஆனால் சற்று கீழே இறக்கி எடுக்கப்பட்டிருப்பதால் முழுமை பெற்றுள்ளது.

பொதுவாகவே சிலந்திகளைப் பார்த்தால் நம்மில் பலர் பயந்து ஓடி விடுவோம், அதனால் தானோ என்னவோ அதன் உடலில் இத்தனை நிறங்களை நாம் பார்த்தே இருக்க மாட்டோம்



இந்தப் புகைப்படத்தில் பெரிய அளவில் பின்தயாரிப்பு ஏதும் செய்யப்படவில்லை. இயற்கை தன்னை அழகாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதேயில்லை. அதனால் இது போன்ற படங்களுக்கு பெரிய அளவில் பின்தயாரிப்பு செய்யாமல் இருப்பதே அழகு. பச்சைப் பசேலென்று அட்டகாசமாய் அமைந்து விட்ட பிண்ணனி, புகைப்படம் முழுவதும் நிரம்பி இருக்கும் அந்த சிலந்தி வலை, அது பின்னப்பட்டிருக்கும் நேர்த்தி, அது கொடுக்கும் texture எனப்படும் தொடுபரப்பு உணர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. Texture எனும் தொடுபரப்பு பார்வைக்கு ஒரே மாதிரி இல்லாமல் ஏனோ தானோ என்று தெளிவற்று இருந்தாலும் இத்தன்மை ஒரு புகைப்படத்திற்கு ஒரு தனி அழகைக் கொடுக்கும். உதாரணமாக, கோயில் கோபுரங்களை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் அவற்றில் இருக்கும் சிற்பங்கள் தெளிவாய் தெரியாது. ஆனால் இச்சிற்பங்கள் தாம் அந்த கோபுரங்களை அழகாய்க் காட்டும். ஒரு குழந்தையின் கிறுக்கல் போல texture-இன் அழகு புரிதற்கு அப்பாற்பட்டது. அது சரியாகப் பயன்படுத்தப்பட்டால் புகைப்படத்தையே சற்று தூக்கி நிறுத்தும். இங்கும் அப்படியே சிலந்திவலை உருவாக்கி இருக்கும் texture அந்த சிலந்தியை சற்று முன்னிறுத்திக் காட்டுகிறது. இதை விட அந்த சிலந்தியின் உடலில் இருக்கும் நிறங்கள் முக்கியம். பிண்ணனியிலிருந்து சிலந்தியை பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டுகின்றன இந்த நிறங்கள். ஆனால் இதிலும் ஒரு சிறு குறை வந்து இந்தப் புகைப்படத்தின் அழகை கெடுக்கத்தான் செய்கிறது.
ஒரு புகைப்படத்தில் உங்களுக்கு தேவைப்படும் பொருட்களோடு சேர்ந்து சில தேவையில்லாதவைகளும் உள்ளே வந்து பின்னால் அமர்ந்து கொள்ளும். பல சமயங்களில் நம்மால் இந்த நுழைவை தவிர்க்க முடியாது. ஆனால் பல சமயங்களில் அது புகைப்படத்தின் அழகை சற்று பாதிக்கவே செய்யும். இந்தப் புகைப்படத்தில் சிலந்திக்குப் பின்னால் ஒரு மெல்லிய பச்சை நிறம் படர்ந்து அந்த சிலந்தியை முன்னிறுத்திக் காட்டுவதை முன்னரே பார்த்தோம் ஆனால் ஒரு மூலையில் மட்டும் சில வெள்ளைப் புள்ளிகள் நம் கண்கள் சிலந்தியை மட்டுமே பார்க்க விடாமல் செய்து கொண்டிருக்கின்றன. புகைப்படத்தில் இருக்கும் மற்ற நிறங்களிலிருந்து இந்த வெள்ளை முற்றிலும் வேறுபட்டு இருப்பதால் நம்மால் சிலந்தியில் அதிக கவனம் செலுத்த முடியாமல் கண்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருக்கும். இந்த புள்ளிகளை பின்தயாரிப்பின் போது வெட்டி விடலாம் என்றாலும், ஒருவேளை இவை சிலந்திக்கு நேர் பின்னால் வந்துவிட்டால் பெரும் சிக்கல் தான். அதற்கு பதில் அந்தப் புகைப்படம் உருவாகையிலேயே வெண்புள்ளிளை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்



உதாரணத்திற்கு இந்த நான்காவது படம். நடந்து முடிந்த ஒரு மழைக்காலத்தின் வரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கும் இரு இலை. பெரிதும் ஆர்ப்பட்டமில்லாத ஒரு புகைப்படம். சில இலைகள், அவைகளைத் தாங்கி நிற்கும் ஒரு கிளை, அதில் ஒரு இலை தாங்கிப் பிடித்திருக்கும் ஒரு துளி நீர். பிண்ணனியில் ஏதாவது கவனம் கலைக்கும் அம்சங்கள் இருந்தால் இந்தப் புகைப்படம் பொருளற்றுப் போயிருக்கும். ஆனால் சிறு களங்கம் கூட இல்லாத நீல நிறம் கொண்ட அந்தப் பின்புலம்தான் இந்தப் புகைப்படத்தின் பலம். இந்தப் புகைப்படமே அந்தத் துளிக்காத்தான் ஆனாலும் அதை நமக்குத் தெளிவாக்கிக் கொடுப்பது எங்கோ பின்புலத்தில் இருக்கும் அந்த சுவர் தான்.

 http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2527

Monday, December 7, 2009

துளி



கீழே குட்டையாய்த் தேங்கியிருந்த தண்ணீர் காத்துக்கொண்டிருந்தது,
எப்பொழுது கீழே விழும் இந்தத் துளி என்று,
எங்கிருந்தோ புறப்பட்டு வந்த காற்று,
ஒரு உலுக்கு உலுக்கிச் சென்றது அந்தத் துளி பிடித்துக்கொண்டிருந்த இலைகளை,
மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்காதவர் உண்டு,
ஆனால் மழை ஒதுங்கியிருக்குமா என்று தெரியவில்லை,
ஒருவேளை ஒதுங்கிருந்தால் வீசிக்கொண்டிருந்த காற்றுக்கு,
கேட்கும்படியாகவே சொல்லியிருக்கும் பாரதியின் வரிகளை,
"வீழ்வேனென்று நினைத்தாயோ"
 

Friday, November 20, 2009

சிலந்தி



உன்னையும் பெண்ணையும் உவமைப்படுத்துவதே தவறு தானே!
அவள் உன்னைப்போல் யாருக்கும் வலை விரிப்பதில்லை.
அவளுக்காக விழுந்துவிட்டு அவளைக் குறை சொல்வதில் என்ன நியாயம்,
தயவு செய்து இனிமேல் நீ வலை பின்னாதே,
உன்னால் இனி அவளை யாரும் துன்புறுத்த வேண்டாம்

Thursday, October 15, 2009

கவிதையான என் பயணக்குறிப்புகள்



என் இரயில் பயணத்தின் நொடிகள் ஒவ்வொன்றும் ஒரு ஆனந்தம்,
முன்பின் தெரியாவிட்டாலும் புத்தகம் இரவல் கேட்கும் அருகில் இருப்பவர்,
உலக அரசியலை நினைத்து வருத்தப்படும் எதிர் இருக்கைக்காரர்,
எங்கோ வேலை செய்யும் மகனையோ மகளையோ சந்திக்கச் செல்லும் பெற்றோர்,
கடந்து செல்லும் காட்சிகளை வியந்து பார்க்கும் அந்தச் சிறுவன்,
தேனீர் விற்றுக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்பவன்,
கழிப்பறை வாசலில் துண்டை விரித்து அமர்ந்திருக்கும் முதியவர்,
தடதடவென தாண்டிப் போகும் ஆள் அரவமில்லாத ரயில் நிலையங்கள்,
இரவில் பரவிக் கிடக்கும் அந்த நிசப்தம்,
எங்கோ மூலையில் தூக்கத்தில் எழுந்து விட்ட தன் குழந்தையை தூங்க வைக்கும் தந்தை,
ரயில் பாலங்களைக் கடக்கையில் உண்டாகும் தாளங்கள்,
நிலவொளியில் மௌனமாய்க் கடந்து போகும்  நீர் வற்றிப்போன ஆறுகள்,
இப்படி ஏதோ ஒரு ரயில் பயணத்தின் போதுதான் என்னைக் கடந்து போனாள் அவள்,
ஒற்றை சடை போட்டு, கன்னத்தில் குழி விழச்சிரித்துக்கொண்டு,
ஏதோ ஒரு கவிதைப்புத்தகத்தை படித்துக்கொண்டு,
அவள் இறங்கும் இடம் வந்ததும் மெதுவாய் கலைந்து சென்றாள்,
அந்த கவிதைப் புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்தில் என்னையும் சேர்த்து கடத்திக்கொண்டு,
அன்று என் பயணக்குறிப்புகளெல்லாம் கவிதை,
இன்று வரை என் எல்லா ரயில் பயணங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறேன்,
என்றோ கண் விழித்துப் பார்க்கையிலோ, சட்டென திரும்பையிலோ,
அவள் என் எதிரே இருக்கமாட்டாளா என்று,
தொடர்கின்றன என் ரயில் பயணங்களும் தேடல்களும்.

Wednesday, October 7, 2009

குடை



குடையின் மீது எனக்கு வெகுகாலமாய் ஒரு பொறாமை,
அதை நனைக்காத மழையே கிடையாது,
ஆனால் யாராவது கேட்டிருப்பார்களா குடையிடம்,
உனக்கு மழை பிடிக்குமா என்று?