Tuesday, February 17, 2009

பெண் என்னும் உன்னதம் - 6

பிறந்தது முதலே மற்றோரின் கைபிடித்து நடைபழகும் மனிதன் தன்னைப்போல் மற்றொருவ‌ரின் கைபிடித்து, நாம் இருவரும் இதுவரை நிறைய புன்னகைத்திருக்கிறோம், கண்ணீர் சிந்தியிருக்கிறோம் இனி எதுவானாலும் பகிர்ந்து கொள்வோம், எனக்கானது என்றோ, உனக்கானது என்றோ இங்கே இரண்டு பூமிகள் இல்லை, அது போல உன் கண்ணீரைத் தாங்கிக்கொள்ள என் தோள்கள் உள்ளன, உன் சோகங்களைத் தாங்கிக் கொள்ள என் மடிகள் உள்ளன, இனி உன் மகிழ்ச்சிக்கு என் உதடுகள் புன்னகைக்கட்டும், என் வலிகளுக்கு உன் விழிகள் துடிக்கட்டும் என்று வாழ்வை எங்கிருந்தோ வந்த அந்த இன்னொரு உயிரோடு எந்த எதிர்பார்ப்புகளுமின்றி பங்கு போட்டுக் கொள்ளும் புனிதம் தான் திருமணம் என்ற நிகழ்வு.

பெண்ணைப் பொருத்தமட்டில் அவள் பிறந்ததுமே அந்த நிகழ்வுக்காகவே தயார் செய்யப்படுகிறாள். நடை, உடை, புன்னகை, கண்ணீர், அசைவு, அதிர்வு என்று அவளுக்கான எல்லமே அந்த நிகழ்வுக்கான ஒத்திகையாகவே நடந்தேறுகிறது. பெண்ணுக்குத் திருமணம் என்பது ஒருவழிப்பாதை பயணம் போல, அங்கே அவளுக்கு முடிவெடுக்கும் உரிமை என்று ஏதுமில்லை, முடிவுகளை ஏற்றுக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகிறாள். வாழப்போவது தானும் தானே என்பதை அவள் மறந்தே விட்டாள், இல்லை மறக்கடிக்கப்பட்டுவிட்டாள். அவளைப் பொருத்தமட்டில் வாழப்போவது அவள் கணவன் மட்டும் தான், அவள் தன்னைப்பற்றி கனவுகள் காண்பதைக்கூட மறந்து விட்டாள்.

காளையை அடக்குவதும், கல்லைத்தூக்குவதும் முன்பெல்லாம் ஒரு பெண்ணை மணமுடிக்க ஒருவன் செய்ய வேண்டிய செயல்கள். ஆனால் இங்கே பெண் என்பவளுக்கான கனவுகள் எங்கே உள்ளது? அந்த காளை மாட்டுக்கோ, கல்லுக்கோ புரியுமென்றால் அவைகளிடம் சொல்லியிருப்பாள் அவள் கனவுகள் என்னவென்று, அவைகளாவது அவளுக்காக போராடியிருக்கும். அவள் கனவுகள் எப்படி ஊமயாகிப்போனதோ அது போலவே அந்த கல்லும், மாடும் கூட புரியாமலே போரடித்தோற்று விட்டன.

இங்கே பெண் பார்க்கும் படலங்களில் பெண் காட்சிப்பொருளாகவே 'பார்க்கப்படுகிறாள்', அவள் அவளுக்கான வாழ்வை யாருடன் பங்குபோட்டுக் கொள்ள வேண்டும் என்பதை அவள் மட்டும் தான் முடிவுசெய்ய முடியாது. சந்தையில் நிற்க வைப்பதைப் போல அவளை அலங்கரித்து, அவளை ஆடச்சொல்லியும் பாடச்சொல்லியும், அதுவும் போததென்று என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவும் கொடுத்து அவளை விற்கும் அந்த கொடுமை அரங்கேறும் போதெல்லாம் அந்த குற்றங்கள் தண்டிக்கப்படுவதில்லை, மாறாக பாரம்பரியம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது, சாக்கடையில் குளித்துவிட்டு பூக்கள் நாற்றம் அடிக்கிறதே என்று புலம்புவதைப் போல.

அந்த காட்சிக்கூடத்தில் அவளை விற்பதற்கான வியாபாரம் பகிரங்கமாகவே அரங்கேறுகிறது. அவள் எந்த அளவுக்கு அடிமையாயிருப்பாள், எந்த அளவுக்கு ஊமையாயிருப்பாள் என்றுக் கூவி கூவி அவள் குடும்பமே அவளை விற்பதற்கு விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை அவலங்களும் அங்கே எந்த ஒழிவு மறைவுமின்றி நடந்தேறுகின்றன. அங்கே தன் வாழ்க்கையைத்தான் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள் தன் உறவுகள் என்பதைக் கூட‌ உணராமல் எங்கோ ஒரு கதவின் இடுக்கு வழியாகவோ, சன்னலின் கம்பிகள் வழியாகவோ அவளின் அத்தனை வருட கற்பனைகளுக்கும் உருவம் கொடுக்க வந்தவனின் முகத்தைத் தான் அவள் தேடிக்கொண்டிருக்கிறாள், முடிவெடுக்க அல்ல, கனவுகள் காண்பதற்கு.

ஒவ்வொரு வீட்டின் கதவிடுக்குகளிலும், சன்னல் கம்பிகளிலும் அவள் கற்பனைகளுக்கு உருவம் கொடுத்தவனைப் பற்றிய கனவுகள் நிறையவே தேங்கிக் கிடக்கின்றன. அந்த துருவேறிய கம்பிகளிடமும், சாவி துவாரங்களிடமும் கேளுங்கள் அவள் அங்கேயே மறந்துவிட்டுப் போன கனவுகளைப் பக்கம் பக்கமாய்ச் சொல்லும். கேட்டு விட்டு வாருங்கள் மேலும் பேசுவோம்...

Tuesday, February 10, 2009

பெண் என்னும் உன்னதம் - 5

மனிதனுக்கு உணர்வு என்பது கரைபுரண்டு ஓடும் நதியின் ஆழம் போல, அளப்பது கடினம். நிதானங்கள் மறந்த நொடிகள் போட்டுக் கொள்ளும் முகமூடிக்கு நாம் நாகரிகமாய்ச் சூட்டிய பெயர் தான் 'உணர்வு'. காதல் முதல் காமம் வரை இங்கே அனைத்துமே அந்த முகமூடிக்குள் தான் ஒழிந்திருக்கின்றன. அதிலும் தென்றல் உரசாத மலர்கள் எவ்வளவு சொற்பமோ அவ்வளவு சொற்பம் காதலை உணராத உயிர்கள். பெண்ணுக்கும் கூட அந்த உணர்வுகள் உண்டு(?) ஆனால் அவளுடைய அந்த உணர்வுகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தான் என்ன?

பெண்ணுக்கான காதல் என்பது தொட்டிக்குள் நீந்தும் மீன்களின் நிலைபோல தான். அவளுக்கு இங்கே வாழ்க்கைக்கான எல்லை என்பதைவிட முன்னமே வரையப்பட்ட எல்லைகளுக்குள் தான் வாழ்க்கையே. அவளால் உணர்வைக் கூட ஒரு இயல்பாய் உணரமுடிவதில்லை. அதற்கும் சாதி, மதம், குடும்ப கௌரவம் என்று இங்கே ஒராயிரம் வேலிகள். இவை அனைத்தையும் தாண்டி அவள் காதலிக்கத்துவங்கும் முன்னரே காதலை அவளுக்கு உணரவைக்கும் அந்த நொடிகள் கடந்து விடுகின்றன.

காதல் என்ற உணர்வு வார்த்தைகளால் வடிக்க முடியாத ஒரு உன்னதம், பெண்ணைப் போலவே. உலகின் மிகச்சிறந்த கவிதையை முதல் முறை வாசிக்கும் நொடியில் உண்டாகும் சிலிர்ப்பு போல, பிறந்து நொடிகளே ஆன ஒரு மழலையின் தீண்டல் போல அதற்கான உணர்வுகள் உன்னதத்தின் உச்சம், அந்த உன்னத நொடிகளை தவறவிட்டு விட்டு அவள் மனதை அவளே நொண்டிச் சாக்கு சொல்லி ஆற்றிக்கொண்டிருக்கிறாள். அந்த சாக்குகள் வேறெதும் அல்ல அந்த ஒராயிரம் வேலிகளில் ஏதோ ஒன்று. அவைகளை உடைத்திறிந்தால் காயம் பட்டுவிடுமோ என்றெண்ணி அவள் உணர்வுகளையும் உள்ளத்தையும் அவளே காயப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.

அவளின் காதல் வரலாறுகளை அவள் போர்வையிலும், தலையணையிலுமே எழுதுகிறாள், கண்ணீரால். அவை ஒவ்வொன்றும் அச்சிலேறாத காய‌ங்கள். அந்த நூல்வேலிகளும் அவைகளை எந்த பிரசுரத்திற்கும் விற்பதில்லை. அந்த காயங்கள் விற்பனைக்கில்லை போலும். இவைகளைத் தவிர அவள் காதலைப் பகிர்ந்து கொள்வது நிலவிடமும், நட்சத்திரங்களிடமும் தான். அவளுக்கும், நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும் இடையே அமர்ந்து அந்த காயங்களுக்காக அவளோடு சேர்ந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது இரவு மட்டும் தான். இன்னும் பல பெண்கள் ஊரடங்கிப் போனபின் தாங்கள் தொலைத்துவிட்ட காதலை நினைத்து இரவோடு மௌனத்தை துணைக்கு வைத்துக் கொண்டு கண்ணீரால் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இரவு தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது அவள் அதனிடம் கொடுத்துவைத்திருக்கும் தொலைந்த காதல் கதைகளைச் சுமந்து கொண்டு, அந்த மௌன நேரங்களைப் படித்துப் பாருங்கள் அவள் தொலைத்து விட்ட அந்த உன்னத உணர்வின் வலிகள் தெரியும். படித்துவிட்டு வாருங்கள் மேலும் பேசுவோம்...

Tuesday, February 3, 2009

பெண் என்னும் உன்னதம் - 4

ஒரு குழந்தை பிறந்ததும் அதன் பெற்றோர் அதற்காக கனவுகளை சேமிக்கத் தொடங்குவது இயல்புதான், ஆனால் அது பெண் குழந்தை என்றால் அவளுக்காக கனவுகள் சேமிக்கப்படுகிறதோ இல்லையோ, நகைகள் சேமிக்கப்படுவது நிச்சயம். ஏன், அப்படி விலை கொடுத்து விற்க அவள் என்ன அவ்வளவா மலிந்து விட்டாள்?

பெண்ணுக்காக என்று சேர்க்கப்படுவது எல்லாமே அவளது கணவனுக்காகவே ஒழிய அவள் கனவுகளுக்காக அல்ல. அவளுக்காக அவள் சேர்த்து வைப்பது என்ன? நம் சிந்தனையில் தோன்றாத கேள்வி தான், அவளுக்கும் கனவுகள் உண்டு, அவளும் சிரிப்பாள், அவளும் ரசிப்பாள், சிந்திப்பாள் இவ்வளவு ஏன் அவளும் ரத்தமும் சதையும் கலந்து செய்த ஒரு சகமனுஷிதான். ஞாபகம் இருக்கிறாதா? இந்தக் கேள்வி அவளுக்கும் சேர்த்து தான்.

இங்கே பெண்ணின் திருமணம் என்பது அவளது வாழ்வின் ஒரு பகுதியாய் பார்க்கப்ப‌டுவதை விட அவளைப் பெற்றோரின் பணி நிறைவு விழாவாகத்தானே கொண்டாடப்படுகிறது. குழந்தை பெண்ணாகப் பிறந்து விட்டால் அவளது திருமணம் அவளைப் பெற்றோரின் கடமையாக மாறிப்போகிறது.

ஒரு சுவாரசியமான கதையின் முக்கியமான சில பக்கங்களைக் கிழித்து விட்டு அதைப் படிப்பது எப்படி இருக்குமோ அப்படித்தான் ஆகிவிட்டாள் அவள்.அவள் பிறந்த உடனே அவளது கதையின் இனிமையான அத்தியாயங்கள் கிழிக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு பெண்ணின் கதையையும் அவளைப் பெற்றோரும் சுற்றோரும் அவளின் திருமண வாழ்க்கை என்ற அத்தியாயத்திலிருந்தே எழுதுகிறார்கள்.

இங்கே அவழுக்கு மட்டும் தான் அந்த சிறப்பு, அவளுடைய டைரியின் பக்கங்களில் அவளின் வாழ்க்கைக் குறிப்புகளை எத்தனையோ பேர் எழுதிவிட்டனர், அது எத்தனையோ கையெழுத்துக்களால் நிரம்பியிருக்கிறது, எவ்வளவோ தேடியும் அவள் கையெழுத்தை மட்டும் காணவில்லை, இன்னும் தேடிக்கொண்டேதான் இருக்கிறேன் நம்பிக்கையுடன், அவள் எழுதுவதை இன்னும் துவங்கவேயில்லை போலும்.

கிழிக்கப்பட்ட பக்கங்கள் இன்னும் நிறையவே உள்ளன, அவைகளை படித்து விட்டு வாருங்கள், இனிமேலாவது கிழிக்காமல். மேலும் பேசுவோம்...