Tuesday, June 22, 2010

உலகக் கோப்பை கால்பந்தாட்டம்

உலகிலேயே அதிகமான ரசிகர்கள் கொண்டாடும் விளையாட்டு கால்பந்து. ஆட்டம் துவங்கி முடியும்வரை மைதானத்தில் வீரர்களிடம் இருக்கும் அந்த விறுவிறுப்பும் பரபரப்பும், எந்த நொடி என்ன நடக்கும், ஆட்டம் எப்படி மாறும் என்ற உணர்வுகள் வீரர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்கள் முகத்திலும் அப்பட்டமாய் இருக்கும். அந்த அளவுக்கு ஒரு ரசிகனின் உணர்வோடு சற்று அதிகமாகவே நெருங்கிய தொடர்புடையது கால்பந்துதான். அந்த விளையாட்டையும் அவர்கள் சார்ந்த அணியையும் ஒரு வெறியோடு நேசிக்கும் ரசிகர்கள் உலகெங்கும் உண்டு. தங்கள் தேசிய அணி என்றல்லாமல், வருடம் முழுவதும் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் இ.பி.எல். ஸ்பானிஷ் லீக் என்று எல்லாவிதமான போட்டிகளிலும் தங்களுக்கென்று ஒரு அணியைத் தேர்ந்தெடுத்து அந்த அணியின் ஆட்டங்களையும் விடுவதில்லை அவர்கள். நமது ஐ.பி.எல்., எல்லாம் அங்கிருந்து தோன்றியதுதான். இப்படி உலகமே நேசிக்கும் ஒரு விளையாட்டின் உலகக் கோப்பை போட்டிகள் நடந்தால் அது எவ்வளவு பெரிய கோலாகலத் திருவிழாவாக இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் துவங்கி முடியும் வரையில் உலகின் அனேக செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என்று அனைவருமே இதைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பார்கள். நடக்கும் பொழுது மட்டுமல்லாமல் நடந்து முடிந்த பிறகும் வெகு நாட்கள் அதைச் சுற்றியேதான் பல விவாதங்கள் இருக்கும்.
கடந்த முறை ஜெர்மனியில் நடந்த போட்டியில் இத்தாலி அணி உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டி இத்தாலி-ஃப்ரான்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது. துவக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாய் சென்று கொண்டிருக்க, ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் சர்ச்சைக்குரிய ஒரு பெனால்டி மூலம் முதல் கோலைப் போட்டது ஃப்ரான்ஸ் அணி. ஃப்ரான்ஸ் அணியின் மலூடா இத்தாலி அணியின் பெனால்டி வளையத்துக்குள் கீழே விழ, அதற்கு இத்தாலி அணியின் மார்க்கோ மாத்தராசிதான் காரணம் என்று கூறி அந்த பெனால்டி ஃப்ரான்ஸ் அணிக்கு வழங்கப்பட, அதைப் பயன்படுத்தி ஃப்ரான்ஸின் ஜிடேன் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். ஃப்ரான்ஸ் முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிகழ்வுக்கான ஆரம்பப் புள்ளியை ஆராய்ந்து பார்த்ததில் மலூடாவை மாத்தராசி ஏதும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. துவக்கமே பரபரப்பாய் இருக்க, ஆட்டத்தின் இறுதி நொடிகள் அதன் உச்சத்தை எட்டியது. மாத்தராசி ஜிடேனை ஏதோ சொல்லித் திட்ட, அதற்குப் பதிலடியாய் ஜிடேன் அவரைத் தன் தலையால் முட்ட, இன்று அந்த ஆட்டமே அந்த நிகழ்வுக்காக இன்னும் நினைவில் கொள்ளப்படுகிறது. அந்த ஆட்டம் முடிந்து வெகு நாட்களாகியும் ஜிடேனும், மாத்தராசியும் எங்கு சென்றாலும் அவர்களிடம் இது குறித்தே கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னாலும் அதுவும் கூட தலைப்புச் செய்தி ஆனது. வெகு நாட்களுக்குப் பிறகும் கூட அந்தப் பதிவு பல கற்பனைகளுடன் இணையத்தில் சுற்றி வந்ததே அந்த நிகழ்வு நம் மனதில் எவ்வளவு பதிந்து போனது என்பதற்கு ஒரு உதாரணம்.
இப்படி சுவாரசியங்களுக்குக் குறைவில்லாத உலகக் கோப்பை கால்பந்து போட்டி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்காவில் ஜூன் 11 அன்று துவங்கியது. ஆனால் இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளோ 2007 ஆண்டே துவங்கி விட்டது. மொத்தம் 204 அணிகள் பங்கேற்க 2007ஆகஸ்டு மாதம் துவங்கியது தகுதிச் சுற்றுகள். உலகின் அதிகமான நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் ஒலிம்பிக் போட்டிக்கு இணையாக இருந்தது இந்த தகுதிச்சுற்றுப் போட்டிகள். எகிப்து, மொராக்கோ போன்ற நாடுகளைத் தோற்கடித்து உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பைப் பெற்ற தென்னாப்ரிக்கா தவிர மற்ற நாடுகள் போட்டியில் பங்கெடுக்கப் போராடின. தகுதிச்சுற்றுப் போட்டிகளும் சுவாரசியத்துக்குக் குறை வைக்கவில்லை. ஃப்ரான்ஸ், அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த இறுதி தகுதிச்சுற்றுப் போட்டியில் ஃப்ரான்ஸின் தியரி ஹென்றி பந்தைக் கையால் தட்டிவிட்டு அதை அவரது அணி வீரர் கோலாய் மாற்ற, அதை நடுவர் கவனிக்கத் தவற, அந்த கோல் மூலம் அயர்லாந்தை வீழ்த்தியது ஃப்ரான்ஸ். அதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து அயர்லாந்து வெளியேறியது, அதற்குப் பதில் ஃப்ரான்ஸ் தகுதிபெற்றது. இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த ஆட்டம் செல்லாது, மறுபடியும் விளையாடலாம் என்று அயர்லாந்து குமுற, அதெல்லாம் முடியாது என்று ஃப்ரான்ஸ் சொல்ல, நாட்டாமையான ஃபிபாவோ அதற்கு விதிகளில் இடமில்லை என்று சொல்லிவிட, இரண்டு நாடுகளும் கோபமாய் முட்டிக்கொண்டு நிற்க, ஃப்ரான்ஸ் அதிபர் சர்க்கோஸி தலையிட்டு அயர்லாந்து மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் அளவுக்குப் போனது. சுவாரசியங்களுக்குக் குறைவில்லாமல் நடந்து முடிந்த தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அணிகள் 32.
தென்னாப்ரிக்கா, ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ப்ரேசில், போர்ச்சுக்கல், ஜெர்மனி, கேமரூன், கானா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட், டென்மார்க், செர்பியா, பராகுவே, இத்தாலி, ஃப்ரான்ஸ், சிலி, மெக்சிகோ, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஹோன்டுராஸ், அல்ஜீரியா, நைஜீரியா, நியூசிலாந்து, க்ரீஸ், ஸ்லோவேனியா, உருகுவே என்று தகுதிபெற்ற நாடுகளை ஒரு பிரிவுக்கு நான்கு நாடுகள் வீதம் பிரித்து மொத்தம் எட்டுப் பிரிவுகளாக்கி துவங்கியேவிட்டது உலகக் கோப்பை. என்னடா இவ்ளோ நாடு இருக்கே இந்தியா எங்க காணோம்னு தேடுறீங்களா? ஆசிய நாடுகள் பிரிவில் தகுதிச்சுற்றுகளில் போட்டியிட்ட இந்தியா அதுலயே வெளியேறிடுச்சு. ஆனாலும் உலகக் கோப்பை துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய இசையமைப்பாளர்கள் சலீம், சுலைமான் பங்கேற்கிறார்கள். அதனால் நாமளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டில இடம்பெற்றாச்சு, கவலை வேண்டாம்னு நம் செய்தி ஊடகங்கள் நம்மை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
துவங்குவதற்கு முன்னரே இவ்வளவு அமர்க்களமாய் இருக்க அதைவிட அமர்க்களமாய் ஜூன் 11 அன்று துவங்கியது உலகக் கோப்பை போட்டிகள், உலகின் முன்னனி இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என்று ஆர்ப்பாட்டத்திற்குக் குறைவில்லாமல் இருந்தாலும் ஒரு சிறு சோகமும் சேர்ந்து கொண்டது. நிகழ்ச்சியில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. அவரின் கொள்ளுப் பேத்தி நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து போனதும், அதனால் துவக்கவிழாவுக்கு அவரால் வர முடியாமல் போனதும்தான் அந்த சோகத்துக்குக் காரணம். தென்னாப்ரிக்க அதிபர் ஜூமா, .நா. வின் தலைவர் பன் கி மூன், மெக்சிகன் அதிபர் கால்தெரான் என்று பலர் பங்குபெற்றும் நெல்சன் மண்டேலா இல்லாத அந்தத் துவக்க விழா சற்று களையிழந்தே காணப்பட்டது.
இவை எல்லாம் முடிந்து உலகமே நான்கு வருடமாய்க் காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை போட்டிகளில் முதல் போட்டியாக போட்டியை நடத்தும் தென்னாப்ரிக்கா மெக்சிகோவுடன் மோதியது. ஃபிபா தரவரிசைப் பட்டியலில் 17வது இடத்திலிருக்கும் மெக்சிகோ, 83வது இடத்திலிருக்கும் தென்னாப்ரிக்காவை எளிதாய் வீழ்த்திவிடும் என்று ரசிகர்கள் காத்திருக்க, ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் இந்த 19வது உலகக் கோப்பையின் முதல் கோலைப் போட்டு அங்கு கூடியிருந்த உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டது தென்னாப்ரிக்க அணி. கோலைப் போட்டவர் தென்னாப்ரிக்க அணியின் ஷபலாலா. கோல் போட்டதோடு நில்லாமல் அதைக் கொண்டாட ஒரு சிறு நடனமும் ஆடி அந்த உற்சாகத்தை அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார். சற்று நேரம் கழித்து மெக்சிகோவும் ஒரு கோல் போட முதல் ஆட்டம் இருவருக்கும் வெற்றி தோல்வியன்றி முடிந்தது. அதன் பிறகு நடந்த போட்டியில் சென்ற உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய ஃப்ரான்ஸ் அணி உருகுவே அணியைச் சந்தித்தது. ஏற்கனவே அயர்லாந்துடனான தகுதிச்சுற்றுப் போட்டியில் நடந்த நிகழ்வுகளால் உலகின் அனைத்து செய்தி ஊடகங்களும் ரசிகர்களும் இந்த அணி மீது வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்க, ஃப்ரான்ஸின் ரசிகர்களும் சற்று நொந்துபோயே இருந்தனர். அதற்கு மகுடம் வைத்தாற்போல ஃப்ரான்ஸ் அணியின் பயிற்சியாளர் ரேய்மண்ட் டொமெனெக் அந்த அணியின் முதல் நிலை ஆட்டக்காரர் தியரி ஹென்றி அணியின் முதல் 11 வீரர்களில் களமிறங்கமாட்டார், இது எங்கள் புது யுக்தி என்று சொல்லி வைக்க, வெறுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டனர் சில ரசிகர்கள். அதற்கேற்றாற் போல அந்த அணிக்கும் உருகுவே அணிக்குமான போட்டி இரண்டு அணிகளுமே கோல் ஏதும் போடாமல் முடிந்துபோனது. அணிக்குள் சரியான புரிதல் இல்லாததே இதற்குக் காரணம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஜிடேன் வருத்தப்பட்டு பேட்டி அளித்துக்கொண்டிருக்க, என்ன ஆகும் ஃப்ரான்ஸின் நிலை என்பது அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே உள்ளது.
முதல் நாள் நடந்த இரண்டு ஆட்டங்களுமே டிராவில் முடிய, என்னடா இந்த உலகக் கோப்பையே டிரா கோப்பை ஆகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டிருக்க, அதற்குப் பதிலளிக்கும் விதமாக இருந்தது இரண்டாம் நாள் ஆட்டம். ஃபிபா தரவரிசையில் 47 வது இடத்திலிருக்கும் தென்கொரிய அணி 13 வது இடத்திலிருக்கும் க்ரீஸ் அணியைச் சந்தித்தது. லீ ஜிங் சூ, பார்க் ஜி சுங் கோல்களை அடிக்க 2-0 என்ற வித்தியாசத்தில் க்ரீஸை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையின் முதல் வெற்றியைப் பதிவு செய்து க்ரீசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது தென்கொரிய அணி. அடுத்த ஆட்டம் உலகின் தலைசிறந்த அணிகளுள் ஒன்றான அர்ஜென்டினாவுக்கும் நைஜீரியாவுக்குமிடையே நடந்தது. அர்ஜென்டினா அணியின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான மாரடோனா பயிற்சியாளர் பொறுப்பிலிருக்க, மெஸ்ஸி, தவேஜ், ஹிகுவேன், வெரான் என்று அணி அதிரடியாய் இருக்கிறது. ஆனால் அனுபவம் இல்லாத பயிற்சியாளர் மாரடோனா, ஒரு மிகச்சிறந்த வீரர். ஆனால் அவரது தவறான யுக்திகள் அர்ஜென்டினாவைத் தோல்விக்கு இட்டுச்செல்லும் என்று பலர் கருத்துக் கூறிக்கொண்டிருக்க, தனது முதல் போட்டியை 1-0 என்ற கணக்கில் வென்று விட்டது அர்ஜென்டினா. ஒரு வீரராய் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த மாரடோனா ஒரு பயிற்சியாளராய் சாதிப்பாரா என்பது இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் அடுத்தடுத்த ஆட்டங்களில் தெரிந்துவிடும்.அர்ஜென்டினா மட்டும் இந்தக் கோப்பையை வென்றுவிட்டால் ஆடையேதுமின்றி அந்த அரங்கத்தைச் சுற்றி ஓடிவருவேன் என்று வேறு பேட்டி அளித்துள்ளார் மாரடோனா, அதனால் அர்ஜென்டினாவின் ரசிகர்களே சற்று கலங்கிப் போய்தான் உள்ளனர்.
இந்த உலகக் கோப்பைக்கான பந்துகளை வடிவமைத்திருப்பது அடிடாஸ் நிறுவனம். இந்தப் பந்துகளுக்கு ஜபுலானி என்று பெயர் சூட்டி உள்ளனர். ஏற்கனவே இந்தப் பந்துகளைப் பற்றி ஏகப்பட்ட குறை பட்டியல்களை அணிகள் வாசித்தபடி உள்ளன. குறிப்பாக அணியின் கோல்கீப்பர்கள், இந்தப் பந்தின் போக்கைக் கணிப்பது மிக சிரமமாக உள்ளதாக குற்றப்பத்திரிகை வாசித்தபடி இருக்க, அடிடாஸ் நிறுவனமோ பிப்ரவரி மாதமே நாங்கள் எல்லா அணிகளுக்கும் இந்தப் பந்துகளை வழங்கி பழகிக்கொள்ளச் சொல்லிவிட்டோம், ஆனா அவங்க ஒழுங்கா அதைப் பயன்படுத்தாம இப்ப சாக்கு சொல்லக்கூடாதுஎன்று பதிலடி கொடுத்துவிட்டது. அப்படி பயிற்சி செய்யாமல் கோட்டை விட்டதால் ஆட்டத்தையும் கோட்டை விட்டது ஒரு அணி. அது வேறு யாருமல்ல, இங்கிலாந்து தான். பொதுவாகவே இங்கிலாந்து அணியின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. இங்கிலாந்தில் நடக்கும் இ.பி.எல். போட்டிகளில் அனேக இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் சார்ந்த அணிகளுக்கு அவர்கள்தான் முக்கிய வீரர்கள். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு வேய்ன் ரூனி, லிவர்பூல் அணிக்கு ஸ்டீவன் ஜெர்ராட், செல்சிக்கு ஜான் டெர்ரி இப்படி இ,பி.எல்.லின் எல்லா அணிகளிலும் இங்கிலாந்து வீரர்கள் உண்டு. இதுல என்ன குற்றம்னு தான யோசிக்கிறீங்க, இந்த வீரர்கள் இவர்கள் சார்ந்த கிளப் அணிகளுக்கு ஆடும்போது மிகச்சிறப்பாக ஆடுவதும், இங்கிலாந்து அணிக்கு ஆடும்போது சொதப்புவதும் வெகு நாட்களாகவே நடக்கிறது. நம் ஐ.பி.எல். போட்டிகள் மீதிலும், அமெரிக்காவின் என்.பி.. போட்டிகள் மீதிலும் கூட இது போன்ற குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த இ.பி.எல். போட்டிகள் நைக்கி நிறுவனத்தோடு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம்தான் அந்தப் போட்டிகளுக்கான பந்துகளை வழங்கும், அந்தப் பந்துகள் ஜபுலானி பந்துகளில் இருந்து வேறுபட்டவை என்பதால், ஆண்டின் அனேக நாட்களை இ.பி.எல். ஆடிக் கழிக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஜபுலானி பந்துகளைப் பயன்படுத்தும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இதற்கான விலையை அவர்கள் அமெரிக்கா உடன் ஆடிய முதல் போட்டியிலேயே கொடுக்க வேண்டியதாயிற்று.
ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே ஜெர்ராட் ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணியை முன்னனிக்குக் கொண்டுசென்றார். ரூனி, ஹெஸ்கி, லாம்பார்ட், ஜெர்ராட், டெர்ரி, ஜோ கோல் என்ற வீரர்களின் பட்டியலோடு ஒரு கோல் முன்னணி வேறு பெற்ற பிறகு இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் தோற்க வாய்ப்பே இல்லை என்ற நிலையிலிருந்தது. அந்த எண்ணங்களுக்கு முடிவு கட்டுவது போல ஒரு நிகழ்வு ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் நடந்தது. அமெரிக்க அணியின் டெம்ப்சி அடித்த பந்து நேராய் இங்கிலாந்து கோல்கீப்பர் க்ரீனை நோக்கிச் சென்றது. அதிக வலுவில்லாமல் அடித்ததால் டெம்ப்சியே கூட அந்தப் பந்து கோலாக மாறும் என்று நம்பவில்லை. ஆனால் க்ரீன் அந்தப் பந்தின் வேகத்தையும் போக்கையும் கணிக்கமுடியாமல் அதைப் பிடிப்பதற்குத் தடுமாற மெதுவாய் உருண்டு அந்தப் பந்து கோல் வளையத்துக்குள் புகுந்தது. இரண்டு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருக்க எவ்வளவோ போராடியும் இரண்டு அணிகளாலும் வேறு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. க்ரீன் அதன் பிறகு பல வீர தீர செயல்களைச் செய்து வேறு சில கோல்களைத் தடுத்தாலும் அவர் செய்த அந்த சிறு தவறு இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை வெற்று வாய்ப்பாக்கி விட்டது. முதல் சுற்றில் இன்னும் அல்ஜீரியா, ஸ்லோவேனியா உடனான போட்டிகள் மீதமிருக்க எப்படியாவது அதை வென்று விட வேண்டுமென்று காத்திருக்கிறது இங்கிலாந்து. க்ரீன் மனது வைக்க வேண்டுமே என்பது தான் அவர்களின் கவலை.
ஆட்டம் துவங்கிய இரண்டு நாட்களில் நடந்த போட்டிகளிலே இவ்வளவு சுவாரசியங்கள் இருக்க, அடுத்த நாள் நடந்த கானா-செர்பிய அணிகளுக்கு இடையேயான ஆட்டம் வேறு ஒரு சுவாரசியத்தை ஒளித்து வைத்திருந்தது. இரண்டு அணிகளும் விறுவிறுப்பாகவெல்லாம் வேண்டாம், அடுத்த அணி தவறு செய்யும் வரை காத்திருப்போம் என்பது போலவே ஆடிக் கொண்டிருக்க, ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் அந்தத் தவறைச் செய்தார் செர்பிய அணியின் குஜ்மானோவிக். செர்பிய அணியின் பெனால்டி வளையத்துக்குள் பறந்து வந்த பந்தை அவர் பறந்து போய் கையை நீட்டித் தொட, அவருக்கு மஞ்சள் அட்டை கொடுத்துவிட்டு கானா அணிக்கு பெனால்டி வாய்ப்பைக் கொடுத்தார் நடுவர். வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டார் கானா வீரர் க்யான். கானா வெற்றி பெற்ற அந்த ஆட்டமும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. ஆப்ரிக்க நாடுகள் நடத்தும் முதல் உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்த முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையையும் சேர்த்து வென்றது கானா. ஆட்டம் முடிந்து வெகு நேரம் ஆகியும் அந்த அணியின் வீரர்கள் ஆடுகளத்தில் நடனம் ஆடிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் வியர்வைத் துளிகளில் நனைந்து கொண்டிருந்தது வெற்றி.
இது இப்படியிருக்க அன்றிரவு நடைபெற்ற ஜெர்மனி, ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம், ஜெர்மன் அணியின் திறமையை உலகுக்கு அறிவிக்கும் களமாகிப் போனது. இந்த உலகக் கோப்பைக்கு வரும் முன்னரே ஜெர்மனிக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. அந்த அணியின் தலைவர் மைக்கேல் பல்லாக், உலகின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவர். இவர் உலகக் கோப்பை துவங்க ஒரு மாதம் முன்பு இ.பி.எல். போட்டிகளில் செல்சி அணிக்காக ஆடிய ஆட்டத்தில் எதிரணி வீரர் கெவின் பிரின்சுடன் மோதி இவரது குதிகால் தசை கிழிந்து விட்டது. அதனால் உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து அவர் விலகிக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பல்லாக்கோ இது திட்டமிட்டே நடத்தப்பட்ட செயல் என்று குமுறிக்கொண்டிருக்கிறார். காரணம் வேறொன்றுமில்லை. இந்த கெவின் பிரின்ஸ் பிறப்பால் ஒரு ஜெர்மானியர். ஆனால் தற்பொழுது கானா அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அதுவல்ல காரணம், கெவின் பிரின்ஸின் கடைக்குட்டி தம்பி ஜெரோம் தற்போதைய ஜெர்மன் உலகக் கோப்பை அணியில் இருக்கிறார். அவருக்காகத் திட்டமிட்டே பல்லாக்கை முடக்கி மூலையில் உட்காரவைத்துவிட்டார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து ஒரு காரணத்தைத் தலைப்புச் செய்தியாக்கி கொஞ்சம் காசு பார்த்துவிட்டன அந்த ஊர் செய்தி ஊடகங்கள். ஆனால் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் முதல் ஆட்டத்திலேயே தூள் பறத்திவிட்டது ஜெர்மனி.
ஆட்டம் துவங்கியது முதலே ஜெர்மனியின் ஆட்டத்தில் பொறி பறந்தது. பொடோல்ஸ்கி, காகாவ், முல்லர், க்ளோசே, ஸ்வான்ஸ்டெய்கர் என்று அந்த அணியின் முன்னணி வீரர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு வளையத்தை அடிக்கொருமுறை உடைத்து நொறுக்கி கோல்களைக் குவித்துக் கொண்டிருந்தார்கள். சராசரி வயது 30ல் இருக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்களால் ஜெர்மன் அணியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போக, 4-0 என்ற கணக்கில் ஆட்டத்தை எளிதாய்க் கைப்பற்றியது ஜெர்மன் அணி. ஜெர்மன் அணியின் இந்த ஆட்டத்துக்கு இன்னொரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, வேறேதுமன்றி அந்த ஜபுலானி பந்துகள்தான். ஜெர்மனியின் கிளப் லீக்குகளுக்கு புண்டிஸ்லீகா என்று பெயர். இந்தப் போட்டிகளுக்கு அடிடாஸ் நிறுவனம்தான் பந்துகளை வழங்கும். அதனால் அந்த அணிகள் இந்த ஜபுலானி பந்துகளைப் பயன்படுத்தி அனுபவப்பட்டதால் தான் ஆஸ்திரேலியாவை இப்படி அடித்து துவைத்து துவம்சம் செய்ய முடிந்தது ஜெர்மனியால் என்று கொளுத்திப்போட்டிருக்கிறார்கள் வல்லுனர்கள். ஆனால் எதைப்பற்றியும் கவலையின்றி அடுத்த போட்டிகளுக்குத் தயாராகி வருகிறது ஜெர்மனி. ஆஸ்திரேலிய அணியோடு அவர்கள் ஆடிய ஆட்டத்தை தொடர்ந்து ஆடினால் கோப்பை அவர்களுக்கு ரொம்பவே தூரமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இது இப்படியிருக்க, நெதர்லாந்து, டென்மார்க் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்த உலகக் கோப்பையின் முதல் ஓன் கோல்பதிவானது. டென்மார்க் வீரர் சைமன் பந்தைத் தலையால் தட்டிவிட அது அந்த அணியின் மற்றொரு வீரரின் பின்னால் பட்டு வலைக்குள் புகுந்து நெதர்லாந்து அணிக்கான கோலாக மாறியது. தனது அணிக்கு எதிராகத் தானே அடுத்த அணிக்கு ஒரு கோல் போட்டுக் கொடுப்பது என்பதுதான் அது. சொந்த செலவில் சூன்யம் என்பார்களே அப்படி. பொதுவாகவே ஏதாவது சிறு தவறே இதற்குக் காரணமாகி விடும். ஆனால் அந்தத் தவறைச் செய்த வீரரின் நிலைதான் ரொம்பப் பரிதாபம். ரசிகர்கள், ஊடகங்கள் என்று எல்லோரும் சேர்ந்து அவரை ஒரு வழியாக்கி விடுவார்கள். ஒரு முறை இந்தத் தவறைச் செய்ததற்காக ஒரு வீரர் கொல்லப்பட்டதும் நடந்திருக்கிறது. 1994 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் அமெரிக்காவும் கொலம்பியாவும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் கொலம்பிய வீரர் ஆந்த்ரே எஸ்கோபார் ஓன் கோல் அடித்து கொலம்பியாவின் தோல்விக்குக் காரணமானார். சற்று நாட்கள் கழித்து சுட்டுக்கொல்லப்பட்டார் எஸ்கோபார், அவரைச் சுட்ட நபர் ஒவ்வொரு குண்டு அவர் மீது பாயும்போதும் "கோல்", "கோல்" என்று கத்திக்கொண்டே சுட்டதாகவும், இதற்கு அவர் அடித்த அந்த கோல்தான் காரணம் என்று பரவலான கருத்து ஒன்று உண்டு. கால்பந்து ஆட்டம் ரசிகர்களால் எந்த அளவு கவனிக்கப்படுகிறது என்பதற்கும், போட்டிகளின் முடிவுகள் எந்த அளவுக்கு ரசிகர்களைப் பாதிக்கிறது என்பதற்கும் இது ஒரு சிறு உதாரணம்.
இன்னும் பல முக்கிய அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களுக்காகக் காத்திருக்க, இப்பொழுதே ஏக பரபரப்பாய் இருக்கிறது இந்த உலகக் கோப்பை போட்டி. என்ன இருந்தாலும் இந்த உலகக் கோப்பையின்போது இந்திய வீரர்களைப் பார்க்க முடியாதே என்ற வருத்தமே நமக்கு வேண்டாம். பெரும்பாலான செய்தி நிகழ்ச்சிகளில் அமர்ந்து இன்று என்ன தவறு செய்ததால் அந்த அணி தோற்றது, என்ன செய்தால் வென்றிருக்கலாம் என்றெல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது அவர்கள்தான். அந்தக் கருத்துகளையெல்லாம் அவர்கள் விளையாடும் போதும் உபயோகப்படுத்தினால் நிச்சயமாய் நாமும் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கலாம். வீரர்களும், நிர்வாகிகளும் மனது வைக்க வேண்டுமே. அதுவரை மற்ற நாடுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3057

3 comments:

aaradhana said...

super post
https://www.youtube.com/edit?o=U&video_id=CBZJihRgLJk

aaradhana said...

https://www.youtube.com/edit?o=U&video_id=-hTp5MoD1JY

aaradhana said...

excellent post https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw